;
Athirady Tamil News

என்னை சுட்டிருக்கலாம்… தவறுதலாக சுடப்பட்ட 9 வயது கேரளச் சிறுமிக்காக வருந்தும் உண்மையான இலக்கு

0

லண்டனில், உணவகம் ஒன்றின்மீது மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அப்பாவிச் சிறுமி ஒருத்தியும் சிக்கிய நிலையில், அவளுடைய நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக லண்டன் பொலிசார் தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில், தவறுதலாக சுடப்பட்ட அந்த சிறுமிக்காக தான் கவலையில் ஆழ்ந்துள்ளதாக தெரிவிக்கிறார், அவளுடன் எந்த தொடர்பும் இல்லாத ஒருவர்.

கடந்த புதன்கிழமை இரவு 9.20 மணியளவில், லண்டனில், Hackney என்னுமிடத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் தன் தந்தையான அஜீஷ், தாய் வினயாவுடன் உணவருந்திகொண்டிருந்திருந்திருக்கிறாள், கேரளாவின் கொச்சியைச் சேர்ந்த லிஸ்ஸல் மரியா (9).

அப்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர், உணவகத்தின் வெளியே அமர்ந்திருந்த மூன்று பேரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். அப்போது, ஒரு குண்டு உணவகத்துக்குள் உணவருந்திக்கொண்டிருந்த மரியா மீது பாய்ந்துள்ளது. சிறுமி மரியாவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மரியாவின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தவறுதலாக சுடப்பட்ட சிறுமிக்காக வருந்தும் நபர்
இந்நிலையில், மரியா சுடப்பட்டதற்காக வருந்துவதாக தெரிவித்துள்ள ஒருவர், தான் நான்கு நாட்களாக உறங்காமல் தவித்துவருவதாகத் தெரிவித்துள்ளார். அவர்தான் உண்மையில் அந்த தாக்குதல்தாரியின் இலக்கு!

ஆம், இந்த துப்பாக்கிச்சூடு இரண்டு போதை மருந்து கடத்தல் கும்பல்களுக்கிடையிலான ஒரு பழிதீர்க்கும் சம்பவம் என தற்போது தெரியவந்துள்ளது. ஆக, அந்த போதை மருந்து கடத்தல் கும்பல்களுடன் தொடர்புடைய ஒருவரைக் கொல்வதற்காகவே அந்த மர்ம நபர் துப்பாக்கியால் சுட, தவறுதலாக, மரியா மீதும் குண்டு பாய்ந்துவிட்டது.

எனவே, அவர்கள் என்னை சுட்டிருக்கலாம் என்று கூறி வருந்தும் அந்த 37 வயது நபர், ஒன்றும் அறியாத அந்தக் குழந்தை சுடப்பட்ட விடயமறிந்து தனது இதயமே உடைந்துபோனதாக தெரிவித்துள்ளார்.

அவள் எந்தத் தவறும் செய்யவில்லை என்று கூறும் அவர், அந்த விடயம் என்னைக் கொன்றுகொண்டிருக்கிறது, அவள் பிழைப்பாளா என தெரியாமல் காத்திருப்பது கடினமாக இருக்கிறது. அவர்கள் என்னை சுட்டிருக்கலாம், நான் அதற்கு தகுதியானவன்தான், அந்த குண்டு என் தலையைத் துளைத்திருக்கக்கூடாதா என்று எண்ணி வருந்துகிறேன், நான்கு நாட்களாக நான் தூங்கவில்லை, நான் அவளுக்காக பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார் அவர்.

இதற்கிடையில், ஏற்கனவே, 2020ஆம் ஆண்டு, ஆகத்து மாதம், இதேபோன்றதொரு கொலை முயற்சியில் அந்த நபர் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.