லொட்டரியில் பரிசு விழுந்ததை மறைத்து கணவரை கழற்றி விட்ட பெண்: உண்மை தெரியவந்தபோது
லொட்டரியில் ஒரு மில்லியன் டொலர்கள் பரிசு விழுந்ததை மறைத்து, அவசர அவசரமாக தன் கணவரை விவாகரத்து செய்தார் ஒரு பெண். ஆனால், உண்மை வெளிவந்தபோது, அவரிடமிருந்த மொத்தத் தொகையும் கணவருக்கு கிடைக்கும் வகையில் தீர்ப்பெழுதிவிட்டார் நீதிபதி ஒருவர்.
அவசர அவசரமாக கணவரை விவாகரத்து செய்த பெண்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வாழ்ந்துவந்த டெனிஸ் (Denise Rossi), தன்னுடன் 25 ஆண்டுகளாக வாழ்ந்துவந்த தன் கணவரான தாமஸை (Thomas Rossi) அவசர அவசரமாக விவாகரத்து செய்துள்ளார். தன் மனைவி தன்னை திடீரென விவாகரத்து செய்ய என்ன காரணம் என புரியாமல் திகைத்துள்ளார் தாமஸ்.
இந்நிலையில், தற்செயலாக அவரது மனைவிக்கு லொட்டரி நிறுவனம் ஒன்றிலிருந்து வந்த ஒரு கடிதம் தாமஸ் கையில் கிடைத்துள்ளது. அப்போதுதான், தன் மனைவிக்கு லொட்டரியில் 1.3 மில்லியன் டொலர்கள் பரிசு விழுந்தது தாமஸுக்கு தெரியவந்துள்ளது.
கையில் கிடைத்த ஆதாரத்துடன் நீதிமன்றம் சென்றுவிட்டார் தாமஸ்.
நீதிபதி எழுதிய தீர்ப்பு
விவாகரத்து கோரியபோது, நான் பல ஆண்டுகளாக இந்த திருமண உறவிலிருந்து வெளியேற ஏங்கிக்கொண்டிருக்கிறேன் என்று கூறியிருந்தார் டெனிஸ்.
ஆனால், அவர் லொட்டரியில் பரிசு விழுந்தவுடன் அவசர அவசரமாக விவாகரத்துக்கு கோரியுள்ளார் என்ற உண்மை தெரியவரவே, கோபமடைந்த நீதிபதி, டெனிஸ், தாமஸுக்கு ஆண்டொன்றிற்கு 66,800 டொலர்கள் வீதம் 20 ஆண்டுகளுக்கு ஜீவனாம்சம் கொடுக்கவேண்டுமென தீர்ப்பு எழுதிவிட்டார்.
அதாவது, டெனிஸுக்கு லொட்டரியில் பரிசாகக் கிடைத்த தொகை 1,300,000 டொலர்கள். நீதிபதி தாமஸுக்கு ஜீவனாம்சமாக கொடுக்க உத்தரவிட்ட தொகையோ 1,336,000 டொலர்கள். ஆக, தனக்கு கிடைத்த மொத்த தொகையுடன், கூடுதலாகவே கணவருக்கு கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது டெனிஸுக்கு!