அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்: சிறப்பு தொற்று நோய் குழுவினரால் வெளியேற்றப்பட்ட பயணிகள்
அமெரிக்காவின் நியூயார்க் நோக்கி பயணப்பட்ட விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டு, தொற்று நோய் நிபுணர்கள் குழுவினரால் பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவ அவசரம்
யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று அயர்லாந்தின் தெற்கு கடற்பகுதியில் பறந்து கொண்டிருந்த போது, இரண்டு தனித்தனி சம்பவங்களுக்காக டப்ளின் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.
இதில் ஒரு சம்பவம் மருத்துவ அவசரம் என்றே கூறப்பட்டது. இன்னொன்று இடையூறு விளைவிக்கும் பயணி ஒருவர் எனவும் தெரிய வந்துள்ளது. குறித்த விமானமானது பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸில் இருந்து நியூயார்க்கின் நெவார்க் விமான நிலையத்திற்கு பயணப்பட்டுள்ளது.
இதனிடையே டப்ளின் விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டதும் விமானத்தைச் சுற்றியுள்ள டார்மாக்கில் ஏராளமான பொலிஸ் கார்களும் ஒரு ஆம்புலன்ஸ் வாகனமும் காணப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
6 மணி நேரம் தாமதமாக
சில மணி நேரங்களில் விமானம் புறப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தொற்று நோய் நிபுணர்கள் குழு வரவழைக்கப்பட்டு, விமானம் மொத்தமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் பயணிகளும் அப்போது விமானத்தில் இருந்துள்ளனர். இதனிடையே யுனைடெட் ஏர்லைன்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலில், இடையூறு ஏற்படுத்திய பயணி வெளியேற்றப்பட்டதுடன், நோய்வாய்ப்பட்ட நிலையில் இரு பயணிகளும் வெளியேற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
நோயுடன் காணப்பட்ட பயணியின் நிலை தொடர்பிலும், அது தொற்று நோயா என்பது குறித்தும் உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை. இதனிடையே, 6 மணி நேரம் தாமதமாக தொடர்புடைய விமானம் நெவார்க் விமான நிலையத்தில் தரையிறங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.