கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் கண்காட்சி
உலக சுற்றாடல் தினத்தை அடையாளப்படுத்தும் முகமாக கோப்பாய் ஆசிரியர் கலாசாலை கணித விஞ்ஞான மன்றம் ஏற்பாடு செய்த விஞ்ஞான கணித உபகரண கண்காட்சி மற்றும் மரம் நாட்டல் நிகழ்வுகள் 05.06.2024 புதன்கிழமை காலை 8.30 மணிக்கு கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்றன.
நிகழ்வின் ஆரம்பத்தில் தேசியக்கொடி , கலாசாலைக்கொடி , சுற்றாடல் கொடி என்பன ஏற்றிவைக்கப்பட்டன. தேசிய கீதம் , சுற்றாடல் கீதம் என்பனவும் இசைக்கப்பட்டன .
தொடர்ந்து ஆசிரிய மாணவர்களும் , விரிவுரையாளர்களும் கலாசாலை சுற்றாடலை தூய்மையாக பேணுவோம் என உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறை முழுநிலை விரிவுரையாளர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜாவும் சிறப்பு விருந்தினராக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதிப்பணிப்பாளர் க. சுபோகரனும் கலந்து கொண்டனர்.
நிகழ்வுகளை விஞ்ஞான நெறி ஆசிரிய மாணவன் இ. செந்தூர்ச்செல்வன் நெறிப்படுத்தினார்.
சுற்றாடல் பாதுகாப்புப் பற்றிய ஆசிரிய மாணவர் உரையினை கணித நெறி ஆசிரிய மாணவன் ச. சந்திரகுமார் ஆற்றினார்.
வரவேற்புரையினை ஆசிரிய மாணவி த. கீற்றாவும் விருந்தினர்கள் தொடர்பான அறிமுகவுரையை கல்வி அபிவிருத்திக்கான பிரதி அதிபர், த. கோபாலக்கிருஷ்ணனும் ஆற்றினர்.
அதிதிகளின் உரையைத் தொடர்ந்து விஞ்ஞான கணித ஆசிரிய மாணவர்களிடையே நடத்தப்பட்ட விஞ்ஞான வினாடிவினா போட்டிக்கான பரிசளிப்பு நடைபெற்றது.
தொடர்ந்து சூழலை நேசிக்கும் உணர்வுடன் மரங்கள் நாட்டி வைக்கப்பட்டன. இந்த மரங்களை பிரதம விருந்தினர் கலாநிதி த. பிரதீபராஜா , கலாசாலை அதிபர் ச. லலீசன் , யாழ்ப்பாணம் தேசியக்கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர்களான த. அம்பிகைபாகன் மற்றும் இ. சயந்தன் ஆகியோர் நாட்டினர்.
நிகழ்வின் நிறைவாக கணித விஞ்ஞான உபகரண கண்காட்சி திறந்துவைக்கப்பட்டது. காட்சிக் கூடத்தை பிரதம விருந்தினர் திறந்து வைத்தார்
ஆரம்பக்கல்வி மற்றும் இடைநிலைக்கல்வியில் உள்ள விஞ்ஞான கணித உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அருகிலுள்ள பாடசாலை மாணவர்களுடன் கலாசாலை மாணவர்களும் கலந்து இக் கண்காட்சியை பார்வையிட்டு பயன் பெற்றனர்.