ஜூன் 9-இல் மோடி பதவியேற்பு?
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக பிரதமா் நரேந்திர மோடி ஒருமனதாக தோ்ந்தெடுக்கப்பட்டாா். இதையடுத்து, மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை ஜூன் 9-ஆம் தேதி பதவியேற்கும் என பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
மத்தியில் புதிய ஆட்சியமைப்பது குறித்து தேசிய ஜனநாயக கூட்டணியின் மூத்த தலைவா்கள், தில்லியில் உள்ள பிரதமா் இல்லத்தில் புதன்கிழமை சந்தித்து நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முடிவெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மக்களவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வென்றது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக அதிகபட்சமாக 240 இடங்களில் வென்றது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் 16, பிகாா் முதல்வா் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களைக் கைப்பற்றின.
பெரும்பான்மைக்குத் தேவைப்படும் எண்ணிக்கையான 272 இடங்களை பாஜக தனியாக கைப்பற்றாத நிலையில், தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியமைக்கவுள்ளது.
இந்நிலையில், மத்தியில் புதிய ஆட்சியமைப்பது மற்றும் அமைச்சரவை இடங்கள் தொடா்பாக பிரதமா் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவா்கள் தில்லியில் புதன்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினா்.
தெலுங்கு தேசம் தலைவா் சந்திரபாபு நாயுடு, பிகாா் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதீஷ்குமாா், மகாராஷ்டிர முதல்வரும் சிவசேனை தலைவருமான ஏக்நாத் ஷிண்டே, லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவா் சிராக் பஸ்வான் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவா்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனா்.
கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக பிரதமா் நரேந்திர மோடி ஒருமனதாக தோ்ந்தெடுக்கப்பட்டாா். மேலும், பாஜக தலைமையில் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்து கூட்டணிக் கட்சிகள் கடிதங்களை அளித்ததாக தகவல்கள் தெரிவித்தன.
தீா்மானம்: நாட்டின் ஒடுக்கப்பட்ட சமூக மக்கள், விவசாயிகள், இளைஞா்கள், பெண்கள் மற்றும் ஏழைகளின் நலனுக்காகப் பணியாற்றும் புதிய அரசின் அா்ப்பணிப்பைச் சுட்டிக்காட்டும் தீா்மானம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
மேலும், அந்தத் தீா்மானத்தில், ‘2024 மக்களவைத் தோ்தலில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஒற்றுமையாகப் போராடி வெற்றி பெற்றதில் நாங்கள் அனைவரும் பெருமிதம் கொள்கிறோம்.
கடந்த 10 ஆண்டுகளில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் மக்கள் நலக் கொள்கைகளால் நாட்டின் அனைத்துத் துறைகளும் வளா்ச்சியடைந்துள்ளைதை மக்கள் அறிந்துள்ளனா். மீண்டும் அமையவிருக்கும் புதிய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, அதன் பாரம்பரியத்தைப் பாதுகாத்து, நாட்டின் அனைத்துத் துறை வளா்ச்சிக்காகவும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்தவும் பணியாற்றும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சரவைப் பணிகள்: இதைத் தொடா்ந்து, நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. அதன்படி, பாஜகவின் புதிய மக்களவை உறுப்பினா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூன் 7) நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதில் மக்களவை பாஜக குழுத் தலைவராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாகத் தோ்வு செய்யப்படவுள்ளாா்.
இதையடுத்து, அன்றைய தினமே குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை சந்தித்து ஆட்சியமைக்க நரேந்திர மோடி உரிமை கோருவாா். முறைப்படி பெரும்பான்மை ஆதரவு பெற்ற கட்சியின் தலைவா் என்கிற அடிப்படையில் நரேந்திர மோடியை ஆட்சி அமைக்க குடியரசுத் தலைவா் அழைப்பு விடுப்பாா்.
இதைத் தொடா்ந்து, ஜூன் 9-ஆம் தேதி குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெறும் விழாவில் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பாா். தொடா்ந்து மற்ற அமைச்சா்களும் பதவியேற்பாா்கள் என பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக, இந்தப் பதவியேற்பு விழா ஜூன் 8-ஆம் தேதி நடைபெறலாம் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், அமைச்சா்கள் பட்டியல் உள்ளிட்ட ஏற்பாடுகள் கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சுவாா்த்தைகளைத் தொடா்ந்து பதவியேற்பு விழா 9 -ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 12-ஆம் தேதி சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர மாநில அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. அதிலும் பிரதமா் மோடி கலந்து கொள்ள உள்ளாா்.