;
Athirady Tamil News

இரணைமடு நீர்ப்பங்கீடு தொடர்பான கலந்துரையாடல்

0

இரணைமடு நீர்ப்பங்கீடு தொடர்பான கலந்துரையாடலானது நேற்று (05.06.2024) இரணைமடு கமக்கார அமைப்புக்கள் மற்றும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புத்தி ஜீவிகளுடன் பத்தரமுல்லையில் அமைந்துள்ள நீர் வளங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மேற்படி விடயம் தொடர்பாக கடந்த 16.02.2024 ஆம் திகதி அன்று நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய, அமைச்சர் ஜீவன் தொண்டமானால் ஒழுங்குசெய்யப்பட்டது.

இதன்போது இரணைமடு நீரப்பங்கீடு தொடர்பான யாழ்மாவட்டம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு எவ்வித பிரச்சினைகளும் ஏற்படாதவாறு ஒரு தீர்க்கமான முடிவினை எட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

குறிப்பாக இரணைமடு நீரப்பங்கீடு தொடர்பான இறுதிபடுத்தப்பட்ட புதிய நவீன ஆய்வுகளுக்கு அமைவாக சிவில் அமைப்புக்கள், விவசாய அமைப்புக்கள், தேசிய நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபை, ஆசிய அபிவிருத்தி வங்கி, UN நீர் முகாமைத்துவம், யாழ் பல்கலைக்கழகம், நீர்ப்பாசன திணைக்களம், UN உணவு மற்றும் விவசாய அமைப்புக்கள் ஆகிய அமைப்புக்களின் தீர்மானமிக்க ஆய்வு அறிக்கையினை எதிர்வரும் 6 மாதங்களுக்குள் பெற்றுக்கொண்டதன் பின்னர் தீர்மானமிக்க முடிவுகள் எட்டப்படும் என முடிவு செய்யப்பட்டது.

இக்கலந்துரையாடலில், அமைச்சர் ஜீவன் தொண்டமான், யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவஞானம் சிறிதரன், அமைச்சின் செயலாளர், நீர் வளங்கள் மற்றும் வடிகால் அமைப்பின் தலைவர், பொதுமுகாமையாளர் அரச அதிகாரிகள்,கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துக்கொண்டர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.