ஒத்திவைக்கப்பட்ட கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமன வழக்கு
கல்முனை (Kalmunai) மேல் நீதிமன்றத்தினால் இடைக்கால தடை உத்தரவின் மூலம் நிறுத்தப்பட்ட கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம் தொடர்பிலான வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 25ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதுடன் நியமனம் தொடர்பிலான பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கு எதிராக இடைக்காலத்தடை வழங்கப்பட்ட நிலையில் குறிப்பிட்ட வழக்கு மீண்டும் கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸியின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கில் சில முன்னேற்றங்கள்
இந்நிலையில் மனுதாரர்களின் சட்டத்தரணிகள் சமர்ப்பித்த விண்ணப்பங்கள் பிரதிவாதிகளின் சட்டத்தரணிகளின் வாதப்பிரதிவாதங்களின் அடிப்படையில் மன்றில் பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதுடன் நியமனம் தொடர்பிலான பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்க இரு தரப்பினர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இதனடிப்படையில் இடைநிறுத்தப்பட்ட கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் சம்பந்தமாக சில ஆலோசனைகள் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டதுடன் கீழ்வரும் விடயங்கள் எதிர்வரும் தவணைக்கு முன்னர் முன்னெடுக்க குறித்த வழக்கில் சில முன்னேற்றங்கள் எட்டப்பட்டன.
கடந்த மாதம் 26ஆம் திகதி (26.05.2024) நியமனங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட பரீட்சாத்திகளின் பட்டியலும் பின்னர் இணையத்தில் அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்வதன் மூலம் ஒவ்வொரு பரீட்சாத்தியும் தனது பெறுபேறுகளைப் பெறமுடியுமான பொறி முறையும் வெளியிடப்படிருந்தது.
தெரிவு செய்யப்பட்ட பட்டியலில் ஒருவர் பெற்ற புள்ளிகளுக்கும் இணையத்தில் அவரின் அடையாள அட்டை இலகத்தை உள்ளீடு செய்யும் போது வரும் புள்ளிகளுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்பட்டன.
மேன் முறையீடு
இது சம்பந்தமாக பிரதிவாதிகள் விளக்கமளிக்கையில் தெரிவு செய்யப்பட்டோரின் பட்டியல் கணனி தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிழையாக புள்ளிகள் உள்ளீட்டம் செய்யப்பட்டதாகவும் பரீட்சாத்திகளின் அடையாள அட்டைகளை உள்ளீடு செய்து இணையத்தில் பெறப்படும் புள்ளிகளே சரியான புள்ளிகள் எனவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதோடு இத்தவறு சம்பந்தமாக விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் இணையப் பொறிமுறை செயற்படும்.அதில் அடையாள அட்டையை இட்டு புள்ளிகளை இன்னொரு முறை அறிந்து கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படும். அதனை இதற்கு முன்னர் இணையத்தில் நீங்கள் அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிட்டு பெற்ற புள்ளிகளோடு ஒப்பிட்டு பார்க்க முடியும். அதில் வித்தியாசம் வருமாக இருந்தால் உடனே கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவிற்கு மேன்முறையீடு மூலம் தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்குள் ஏதாவது பிரச்சினை இருந்தால் உடனே பொதுச் சேவை ஆணைக்குழுவிற்கு மேன்முறையீடு செய்வதன் மூலம் தெரிவிக்க முடியும். நடைபெற்ற நேர்முகப் பரீட்சையில் சான்றிதழில் effective date சம்பந்தமாக ஏதாவது குழப்பங்கள் நடந்து அல்லது பாடங்கள் சம்பந்தமாக ஏதாவது குழப்பங்கள் நடந்து நேர்முகப் பரீட்சைக்கு நிராகரிக்கப்பட்டவராக இருந்தால் சரியான ஆவணங்களோடு மேன் முறையீடு செய்து மீண்டும் நேர்முகப் பரீட்சைக்கு உள்வாங்க நடவடிக்கை எடுக்க முடியும்.
புள்ளிகளில் ஏதாவது திருத்தங்கள் இருப்பின் நீதிமன்றத்தை நாட முன்னர் அவற்றைத் தீர்த்துக்கொள்ள மேன் முறையீடுகள் மூலம் முயற்சி செய்யுங்கள்.
நீதிமன்றம் இறுதித் தீர்வாகவே இருக்க வேண்டும் என இரு தரப்பினர்களும் இணக்கம் தெரிவித்திருந்த நிலையில் எதிர்வரும் ஜூன் மாதம் 25 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.