;
Athirady Tamil News

தேசிய பாடசாலைகளில் முக்கிய பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்களுக்கு விரைவில் தீர்வு

0

தேசிய பாடசாலைகளில் விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பாடங்களுக்கு நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் எதிர்வரும் இரண்டு வாரங்களில் நிரப்பப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.

நாட்டின் கல்வித் துறை தொடர்பில் நேற்றைய தினம் (05.06.2024) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“நாட்டில் சுமார் 8,000 ஆசிரியர்களுக்கு வெற்றிடங்கள் நிலவுகின்றன. மாகாண பாடசாலைகளில் காணப்படும் 6,000 ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புவதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாரிய பின்னடைவு
மேலும், கோவிட் தொற்று காலத்திற்கு பின்னர் அதிபர், ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் நாட்டில் இடம்பெற்ற போராட்டங்கள் காரணமாக 2022ஆம் ஆண்டு கல்வித்துறை உட்பட முழு நாடும் பாரிய பின்னடைவைக் கண்டது.

இந்நிலையில், 2022ஆம் ஆண்டில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை, கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை, சாதாரண தரப் பரீட்சை நடத்துதல் மற்றும் வினைத்திறன் பரீட்சை வினாத்தாள்கள் திருத்துதல், பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் ஆறு மாதத்துக்கும் மேலாக தாமதமடைந்தன.

இவற்றிற்கிடையில், தற்போது தேசிய பாடசாலைகளில் நிலவும் 10,535 ஆசிரிய வெற்றிடங்களை முக்கிய பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறைகளை நிரப்புவதன் மூலம் சரி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது” என சுட்டிக்காட்டியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.