;
Athirady Tamil News

பாரதப் பிரதமருக்கு சிறீதரன் எம்.பி வாழ்த்து

0

நடைபெற்று முடிந்த இந்திய நாடாளுமன்றதுக்கான 18வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கமைய, தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் பாரத தேசத்தின் பிரதமராகப் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு (Narendra Modi) நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S.Sritharan) வாழ்த்துரைத்துள்ளார்.

இது தொடர்பிலான அவரது ஊடக அறிக்கையில், “தாங்கள் இந்திய மக்களின் மன உணர்வுகளை வென்றிருப்பதன் பிரதிபலிப்பாகவே மக்களவைத் தேர்தலில் பெற்றிருக்கும் இந்த வெற்றி அமைந்திருக்கிறது.

நிரந்தர அரசியல் தீர்வு
பாரதத்தின் அரசியல், பொருளாதார, சமூக நலன் சார்ந்து தாங்கள் ஆற்றவிருக்கும் பணிகளின் விளிம்பில், ஈழத் தமிழர்களுக்கும் இந்திய தேசத்துக்கும் இடையே இழையோடியிருக்கும் உறவின் கனதியை உயிர்ப்பிக்க வேண்டிய காலக்கடமையும் தங்களிடத்தே தரப்பட்டிருப்பதாக நாம் உணருகிறோம்.

இலங்கைத் தீவில், ஈழத் தமிழ் மக்களுக்கென அர்த்தமுள்ளதும் அடிபணியாததுமான சமஸ்டி முறையிலான நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுத்தருவதில் இந்தியாவே பாதுகாப்பு அரணாக இருக்க வேண்டும் என்பதே எமது இனத்தின் நீண்டகால எதிர்பார்ப்பாகும்.

அந்தவகையில் தங்களது அனுசரணையும் அழுத்தமும் இன்றி இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் தமக்குரித்தான உரிமைகளுடன் வாழும் வாய்ப்பைப் பெறமுடியாதென்பதை நாம் திடமாக நம்புகிறோம்.

இன, மத அடக்குமுறைகள்
போருக்குப் பின்னரும் இன, மத அடக்குமுறைகளுக்கு ஆளாகியிருக்கும் எமது மக்களின் ஆட்சி உரிமை மற்றும் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக, எமது கட்சியாகிய இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்த்தேசியத் தரப்புகளால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளில், இந்திய மத்திய அரசு தனது முதன்மையான பணிகளை ஆற்ற முன்வர வேண்டுமென்ற எதிர்பார்ப்பை எமது இனத்தின் கோரிக்கையாக தங்களிடம் முன்வைக்கிறேன்.

இந்திய தேசத்தின் வரலாற்றுப் பக்கங்களில் தனித்துவம் மிக்க தலைவராக, தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் மக்கள் ஆணைபெற்று, பாரதப் பிரதமராக ஆட்சிபீடம் ஏறியிருக்கும் தங்களின் பணிகள், இந்திய மற்றும் ஈழ தேசங்களின் நலனுக்கான வரலாற்றுப் பணிகளாய் அமைய வாழ்த்தி நிற்கிறேன்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.