பொது நிகழ்ச்சிகளில் குண்டு துளைக்காத ஆடை அணியும் விளாடிமிர் புடின்: பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
கொலை முயற்சி நடக்கலாம் என்ற அச்சத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் குண்டு துளைக்காத ஆடை அணிவதுடன், பாதுகாப்புக்கு சிறப்பு படை ஒன்றையும் களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உயிருக்கு அச்சுறுத்தல்
உக்ரைன் அல்லது ஐ.எஸ் தீவிரவாதிகள் அல்லது அரசியல் எதிராளிகளால் தமது உயிருக்கு அச்சுறுத்தல் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நம்புவதாக கூறப்படுகிறது.
மட்டுமின்றி, இந்த அச்சுறுத்தல் காரணமாக அவர் கொஞ்சம் நடுக்கத்தில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. அத்துடன் பாதுகாப்பை வரலாறு காணாதவகையில் அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், 2022ல் ஜப்பான் பிரதமர் Shinzo Abe படுகொலை செய்யப்பட்டதும், கடந்த மாதம் ஸ்லோவாக்கிய பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீதான தாக்குதலும் புடினுக்கான சிறப்பு பாதுகாப்பு அமைப்புகளை அச்சம்கொள்ள வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனாலையே, விளாடிமிர் புடினுக்கான பாதுகாப்பை பலமடங்கு பலப்படுத்தியுள்ளனர். புடினின் பாதுகாப்பு பணிகளை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளதுடன், நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதுகாப்புக்கு என சிறப்பு படை ஒன்றை களமிறங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
குண்டு துளைக்காத உடை
மேலும், 2023 தொடக்கத்தில் இருந்தே உக்ரைனுக்கு பயந்து, பொது நிகழ்ச்சிகளில் விளாடிமிர் புடின் குண்டு துளைக்காத ஆடைகளுடன் வலம் வருவதாகவே தகவல் கசிந்துள்ளது.
இந்த ஆண்டு நடந்த இரண்டாம் உலகப் போர் வெற்றிவிழா கொண்டாட்டத்தின் போதும் புடின் குண்டு துளைக்காத உடை அணிந்திருந்துள்ளார் என்றே கூறப்படுகிறது.
ஆனால் ஜனாதிபதி மாளிகை தரப்பில், புடினுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள விவகாரத்தை மறுத்துள்ளது. இருப்பினும் விளாடிமிர் புடினுக்காக பாதுகாப்பு அம்சங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாக குறிப்பிட்டுள்ளது.