பிரான்சில் பெண்ணொருவர் ஏற்படுத்திய பாரிய விபத்து: 10 பிள்ளைகள் படுகாயம்
பிரான்சில், பள்ளிக்குச் சென்றுவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த 12 பிள்ளைகள் மீது கார் ஒன்று மோதியதில், 10 பிள்ளைகள் படுகாயமடைந்தார்கள், அவர்களில் மூன்று பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாரிய விபத்தில் 10 பிள்ளைகள் படுகாயம்
நேற்று முன் தினம் மாலை, பிரான்சிலுள்ள La Rochelle என்னும் நகரில், 12 பள்ளிப்பிள்ளைகள் சைக்கிளில் சென்றுகொண்டிருந்திருக்கிறார்கள். அவர்கள் 12 பேரும், தினமும், பள்ளி முடிந்தபின் ஒன்றாக சேர்ந்து சைக்கிளில் பயணிப்பார்களாம்.
அப்படி அவர்கள் நேற்று முன் தினம் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருக்கும்போது, எதிரே வந்த கார் ஒன்று அவர்கள் மீது வேகமாக மோதியுள்ளது. தூக்கி வீசப்பட்ட பிள்ளைகள் கதறியழ, அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் உதவிக்கு ஓடோடி வந்ததுடன் பொலிசாரையும் அழைத்துள்ளார்கள்.
32 தீயணைப்பு வீரர்களுடன், 7 ஆம்புலன்ஸ்கள், ஒரு ஏர் ஆம்புலன்ஸ் என சம்பவ இடத்துக்கு பொலிசாருடன் விரைந்த மருத்துவ உதவிக்குழுவினர் பிள்ளைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். அந்தப் பிள்ளைகளில் 7 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், மூன்று பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
பெண் கைது
விபத்தை ஏற்படுத்திய பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளார்கள். ஆனால், கேள்விகளுக்கு பதில் சொல்லும் நிலையில் அவர் இல்லை. அவருக்கு வயது, 83. ஆக, அவரையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள் பொலிசார்.