ஜேர்மனியில் ஜூன் மாதத்தில் புலம்பெயர்தல் விதிகளில் செய்யப்படவிருக்கும் மாற்றங்கள்
ஜேர்மனியில், இந்த மாதத்தில், அதாவது, 2024ஆம் ஆண்டு, ஜூன் மாதத்தில், புலம்பெயர்தல் மற்றும் குடியுரிமைச் சட்டங்கள், சில மாற்றங்களுடன் அமுல்படுத்தப்பட உள்ளன. அவை தொடர்பில் சில முக்கிய விடயங்களைப் பார்க்கலாம்.
ஜேர்மனி, இந்த மாதத்தில், அதாவது, ஜூன் மாதத்தில் opportunity card அல்லது Chancenkarte என்னும் விசாவை அறிமுகம் செய்கிறது.
இது ஜேர்மனியில் வேலை தேடுவோருக்கான விசாவாகும். ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியே வழ்பவர்கள், ஜேர்மனிக்கு வந்து வேலை தேடிக்கொள்வதற்கு இந்த விசா அனுமதிக்கும். அவர்கள், அந்த காலகட்டத்தில், வாரம் ஒன்றிற்கு 20 மணி நேரம் வரை வேலை செய்யலாம்.
இன்னொரு முக்கிய மாற்றம் என்னவென்றால், மேற்கு பால்கன் நாடுகள் என அழைக்கப்படும் அல்பேனியா, போஸ்னியா மற்றும் ஹெர்செகோவ்னியா, கொசோவா, மாண்டினெக்ரோ, வட மாசிடோனியா மற்றும் செர்பியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஜேர்மன் தொழிலாளர் சந்தைக்குள் நுழைவதற்காக உருவாக்கப்பட்ட West Balkans regulation என்னும் நடைமுறை 2023இல் காலாவதியாவதாக இருந்தது.
அது, இந்த மாதம் காலவரையரையின்றி நீட்டிக்கப்பட உள்ளது. அத்துடன், அந்த திட்டத்தின்கீழ் ஆண்டொன்றிற்கு 50,000 பேருக்கு பணி விசா வழங்கப்பட உள்ளது.
ஜேர்மனியின் புதிய குடியுரிமை விதிகள் அமுல்
ஜேர்மனியில் வாழ்ந்துவரும் வெளிநாட்டவர்கள் நீண்ட காலமாக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஜேர்மனியின் புதிய குடியுரிமை விதிகள், ஜூன் மாதம் 27ஆம் திகதி அமுலுக்கு வருகின்றன.