4 வயது சிறுமி தாக்குதல் விவகாரம்: ரணில் வெளியிட்ட முக்கிய பதிவு
அண்மையில் 4 வயது சிறுமி தந்தை ஒருவரினால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறிலங்கா அதிபர் அதிபர் ரணில் விக்ரமசிங்க கண்டனம் வெளியிட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அதிபர் ரணில் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய தந்தைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இவ்வாறான சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதிபர் தெரிவித்துள்ளார்.
நாளைய எதிர்காலம்
இதேவேளை, சிறுமியின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமெனவும் அதிபர் வலியுறுத்தியுள்ளதோடு, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உதவிகள் வழங்கப்பட வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சிறுவர்கள் இன்றி நாளைய எதிர்காலம் கிடையாது என்பதனை அனைவரும் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
அதி உச்ச முக்கியத்துவம்
இவ்வாறான சம்பவங்களை தடுக்க சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளதாகவும் சிறுவர்களின் நலன்களை உறுதி செய்வதற்கு அதி உச்ச முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டுமெனவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கல்யாணபுர பிரதேசத்தில் குறித்த சிறுமியை கொடூரமான முறையில் தாக்கிய தந்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, தாக்குதலுக்கு துணை புரிந்த மேலும் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.