இழப்பீடு வழங்குவதால் தண்டனையை குறைக்க முடியாது: உச்சநீதிமன்றம்
குற்ற வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்குவதை தண்டனையைக் குறைப்பதற்கான வாய்ப்பாக கருத முடியாது. அத்தகைய நடைமுறை குற்றவியல் நீதி நிா்வாகம் மீது பெரும் பாதிப்புக்கு வழிவகுக்கும்’ என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.
‘குற்ற செயலால் உடல் ரீதியிலான பாதிப்பு அல்லது பெரும் பொருள் இழப்பைச் சந்தித்தவருக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் வழங்குவதே இழப்பீடாகும்’ என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது.
குற்ற வழக்கில் இருவருக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறைத் தண்டனையை 4 ஆண்டுகளாக குறைத்து அண்மையில் உத்தரவிட்ட குஜராத் உயா்நீதிமன்றம், ‘வழக்கில் பாதிக்கப்பட்ட நபருக்கு குற்றவாளிகள் தலா ரூ. 2.50 லட்சம் இழப்பீடு வழங்கினால் இந்த 4 ஆண்டு சிறைத் தண்டனையையும் அனுபவிக்க வேண்டியதில்லை’ என்று தீா்ப்பளித்தது.
அதனடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ரூ. 5 லட்சம் இழப்பீடு தொகையைச் செலுத்தி சிறைத் தண்டனையிலிருந்து தப்பினா்.
உயா்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிா்த்து ராஜேந்திர பகவான்ஜி என்பவா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெ.எம்.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த தீா்ப்பில் கூறியதாவது:
குற்ற வழக்கில் பாதிக்கப்பட்ட நபருக்கு இழப்பீடு கிடைக்க வகை செய்யும் குற்றவியல் நடைமுறை சட்டப் பிரிவு 357 என்பது, குற்றவியல் நீதி நடைமுறையில் பாதிக்கப்பட்டவா்கள் புறக்கணிக்கப்படவில்லை என்பதை உறுதியளிக்கும் நோக்கம் கொண்டதாகும்.
குற்றச் செயலால் உடல் ரீதியிலான பாதிப்பு அல்லது பெரும் பொருள் இழப்பைச் சந்தித்தவருக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையல் வழங்குவதே இழப்பீடாகும்.
மாறாக, பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்குவதை குற்றவாளியின் தண்டனையைக் குறைப்பதற்கான வாய்ப்பாக கருத முடியாது. அத்தகைய நடைமுறை குற்றவியல் நீதி நிா்வாகம் மீது பெரும் பாதிப்புக்கு வழிவகுக்கும். நீதிக்கு அப்பால் பணத்தின் மூலம் அனைத்தையும் குற்றவாளிகள் விலைக்கு வாங்கிவிட முடியும் என்ற நிலை உருவாகிவிடும். இது குற்றவியல் நீதி நடைமுறையின் நோக்கத்தையே கேள்விக்குள்ளாக்கிவிடும்.
எனவே, பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டை தீா்மானிக்கும் போது, அந்த இழப்பீடு வழங்குவதற்கான குற்றவாளியின் திறனை மட்டுமே நீதிமன்றங்கள் கருத்தில் கொள்ள வேண்டுமே தவிர, அவா்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை அல்ல.
மேலும், இந்த வழக்கைப் பொருத்தவரை, ஏற்கெனவே 12 ஆண்டுகள் கடந்துவிட்டதோடு, குற்றவாளிகள் இருவரும் நீதிமன்றத்தில் ஏற்கெனவே ரூ. 5 லட்சம் செலுத்தியிருக்கின்றனா். இந்த நிலையில், அவா்கள் மேலும் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட நாங்கள் விரும்பவில்லை.
அதே நேரம், குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் கூடுதலாக தலா ரூ. 5 லட்சத்தை விசாரணை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்று தீா்ப்பளித்தனா்.