;
Athirady Tamil News

கிரிமினல் எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – அதிர்ச்சியளிக்கும் ரிப்போர்ட்!

0

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற எம்.பி.க்களில் சுமார் பாதிபேர் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் 543 மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, வெற்றியும் அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. பாஜக தலைமையிலான கூட்டணி 293 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 இடங்களிலும், பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 16 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன.

இந்நிலையில், ஜனநாயக சீர்திருத்தம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.பி.க்களில் சுமார் 46% பேர் இதுவரை இல்லாத அளவுக்கு கிரிமினல் வழக்குகள் உள்ளவர்கள் என்று தெரிவித்துள்ளது.

அதாவது, கடந்த 2019 தேர்தலில் வென்ற எம்.பி.க்களில் 233 பேர் மீதும், 2014ல் வென்றவர்களில் 185 எம்.பி.க்கள் மீதும், 2009ல் வென்றவர்களில் 162 எம்.பி.க்கள் மீதும், 2004ல் வெற்றிபெற்றவர்களில் 125 பேர் மீதும் மட்டுமே குற்ற வழக்குகள் இருந்ததாகவும், ஆனால், தற்போது தேர்வாகியுள்ள எம்.பி.க்களில் 251 பேர் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, 170 பேர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட கொடூர குற்ற வழக்குகள் இருப்பதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. இதில், 27 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. 15 பேர் மீது பெண்கள் மீது தாக்குதல் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட வழக்குகளும் இருப்பதாக, ஜனநாயக தீர்திருத்த அமைப்பு தெரிவித்துள்ளது.

பாஜகவை பொறுத்தவரை 240 பேர் வெற்றிபெற்றுள்ள நிலையில், அதில் 94 பேர் மீது கிரிமினல் வழக்கு இருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் வெற்றிபெற்ற 99 பேரில், 49 பேர் மீதும், சமாஜ்வாதியில் 21 பேர் மீதும், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் திமுகவில் தலா 13 பேர் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய எம்.பி.க்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்துள்ள ஜனநாயக சீர்திருத்த அமைப்பு, மக்கள் விழிப்புடன் வாக்களிப்பது அவசியம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.