இலங்கை நாணயத்தாள்களை காலுக்குள் போட்டு மிதித்த தியாகி – வலுக்கும் எதிர்ப்புக்கள்
யாழ்ப்பாணத்தில் தன்னை கொடை வள்ளலாக காட்டிக்கொள்ளும் , தியாகி அறக்கொடை நிறுவனத்தின் தலைவர் வாமதேவா தியாகேந்திரன் இலங்கையில் புழக்கத்தில் உள்ள ஐந்தாயிரம் ரூபாய் தாள்களை காலில் போட்டு மிதித்துள்ளமைக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
குறித்த நபரின் மகளின் 40ஆவது பிறந்த தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள தனது அறக்கட்டளை அலுவலகத்தின் முன்பாக வைத்து வறிய மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக அறிவித்து இருந்தார். அதனால் பல நூற்றுக்கணக்கான மக்கள் அலுவலகம் முன்பாக குவிந்து காணப்பட்டமையால் , குறித்த வீதியின் ஊடான போக்குவரத்தும் முடக்கப்பட்டு இருந்தது.
பின்னர் பொலிஸார் இராணுவத்தினர் பெருமளவு குவிக்கப்பட்டு , மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தி , நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.
அந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு தியாகேந்திரன் கருத்து தெரிவிக்கும் போது , இன்றைக்கு நிவாரணம் பெறுவதற்கு தான் எதிர்பார்த்த மக்கள் வரவில்லை என கூறி , தனது சட்டை பையில் இருந்த பெருமளவான ஐந்து ஆயிரம் ரூபாய் தாள்களை எடுத்து நிலத்தில் போட்டு சப்பாத்து காலால் மிதித்த படி நின்று கருத்து தெரிவித்தார்.
குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியதை அடுத்து பெருமளவானோர் கடும் எதிர்ப்புக்களை தெரிவிப்பதுடன் கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.
அதேவேளை 2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 55ஆம் பிரிவின் நியதிகளில் இலங்கை மத்திய வங்கியினது ஆளுகைச் சபையின் அதிகாரமின்றி எந்தவொரு நபரும், நாணய தாள்களை வெட்டுதல், துளையிடுதல் அல்லது வேறு ஏதேனும் வழிகளில் எந்தவொரு நாணயத்தினையும் உருச் சிதைத்தல்; எந்தவொரு நாணயத் தாளிலும் அச்சிடுதல், முத்திரை பதித்தல் அல்லது எதனையும் வரைதல் அல்லது எந்தவொரு நாணயத் தாள்களின் மீதும் ஏதாவது சீல் அல்லது முத்திரைகளை ஒட்டுதல்; ஏதேனும் நாணயத் தாளின் மீது விளம்பரமொன்றின் தன்மையையொத்த அல்லது வடிவத்தினை இணைத்தல் அல்லது ஒட்டுதல் ஆகியவை தண்டனைக்குரிய குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.