ஐடி வேலை என நம்பி சீன வலையில் சிக்கிய ஆயிரக்கணக்கான இந்திய இளைஞர்கள்!
தமிழகம் உள்பட நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள், வெளிநாடுகளில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக முகவர்களால் ஏமாற்றப்பட்டு, சீன நிறுவனங்களிடம் கொத்தடிமைகளாகக் விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
கம்போடியா, லாவோஸ், மியான்மர் போன்ற நாடுகளிலிருந்து இயங்கும் சர்வதேச மோசடி கும்பல்களிடம் கைமாற்றப்பட்ட இந்திய இளைஞர்கள் அவர்கள் சொல்லும் மோசடி வேலைகளை செய்தே ஆக வேண்டிய மோசமான நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா, அரபு நாடுகளைச் சேர்ந்த பலரின் தொலைத்தொடர்பு எண் உள்ளிட்ட அடையாளத்தை கொடுத்து அவர்களிடம் பெண் பெயரில் பேசி, பணத்தை மோசடி செய்வதே இவர்களுக்கு இலக்கு.
ஒரு நாளைக்கு பல மணி நேரம், பல்வேறு நாடுகளிலிருந்தும் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு சமூக வலைத்தளத்திலோ அல்லது மின்னஞ்சல், வாட்ஸ்ஆப் எண்ணிலோ தொடர்பு கொண்டு அவரை ஏதேனும் ஒரு மோசடி வலையில் வீழ்த்தி, வங்கிக் கணக்கை பூஜ்ஜியமாக்குவதே இந்தியாவிலிருந்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்ற வேண்டும் என்ற கனவுடன் சென்ற இளைஞர்களுக்கு பணிக்கப்படும் பணி.
அங்கிருந்து தப்பிக்க நினைத்த இளைஞர்கள், குண்டர்களால் பிடிக்கப்பட்டு கழிப்பறை கூட இல்லாத இருட்டறையில் அடைக்கப்பட்டு, அவர்கள் சித்ரவதை செய்யப்படுகிறார்கள் என்கின்றன தகவல்கள்.
இந்தியாவிலிருந்து ஏராளமான பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்த வலையில் சிக்கியிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் அவர்கள், தங்களது நிலையை எப்போது அறிகிறார்கள் என்றால், அலுவலகம் என்ற ஒரு கட்டடத்துக்குள் அழைத்துச் செல்லப்படும்போதுதான்.
சமூக ஊடகங்களில் வெளிநாடுகளில் வேலை என்று வரும் விளம்பரங்களில் இருக்கும் எண்களை தொடர்புகொண்டுதான் இதில் பெரும்பாலானோர் சிக்கியிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இங்குச் சென்றவர்களுக்கு எப்படி பெண்கள் போல சாட் செய்வது, ஒருவரை எப்படி வலையில் வீழ்த்துவது, ஒருவரின் புகைப்படம் கிடைத்தால் அதனை எப்படி விடியோவாக மாற்றுவது போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகிறதாம். ஒருவரிடமிருந்து பணம் பறிக்கப்பட்டதும், அவருடன் பேசப் பயன்படுத்தப்பட்ட சிம் கார்டு தூக்கி எறியப்படுமாம்.
சிலர், பணி வாய்ப்பு என்ற பெயரில் கம்போடியா போன்ற நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு துன்புறுத்தப்பட்டு, குடும்பத்தினரால் பெரிய தொகை கொடுத்தும் மீட்கப்பட்டுள்ள சம்பவங்களும் நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது.