;
Athirady Tamil News

நரேந்திர மோடியின் வெற்றி – கடும் எதிர்ப்பை வெளியிட்ட சீனா: தைவான் கண்டனம்

0

மக்களவைத் தோ்தலில் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த தைவான் அதிபருக்கு பிரதமா் நரேந்திர மோடி (Narendra Modi )நன்றி கூறியதற்கு சீன எதிா்ப்புத் தெரிவித்துள்ளது.

18-ஆவது மக்களவைத் தோ்தலில் 294 இடங்களைக் கைப்பற்றி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடா்ந்து 3-ஆவது முறையாக ஆட்சியமைக்கிறது.

இந்தநிலையில், பிரதமா் மோடிக்கு தைவான் அதிபா் லாய் சிங் தே (Lai Ching Te), வளா்ந்து வரும் தைவான்-இந்தியா கூட்டுறவை மேம்படுத்த எதிா்நோக்கி இருப்பதாக வாழ்த்து தெரிவித்திருந்தார்.

நன்றி தெரிவித்த மோடி
இதனையடுத்து, தைவான் (Taiwan) அதிபருக்கு நன்றி தெரிவித்து பிரதமா் மோடி, “பரஸ்பர நன்மை பயக்கும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப கூட்டுறவை நோக்கி நாம் பணியாற்றும்போது நெருங்கிய உறவுகளை எதிா்பாா்க்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், தைவான் பிராந்தியத்துக்கு அதிபா் என்று யாருமில்லை. சீனாவுடன் ராஜீய உறவுகளைக் கொண்ட நாடுகளுக்கும் தைவான் அதிகாரிகளுக்கும் இடையிலான அனைத்துவகை அதிகாரபூா்வ தொடா்புகளையும் சீனா எதிா்ப்பதாக குறிப்பிட்டுள்ளது.

சீனாவுக்கு கண்டனம்
இதேவேளை, சீனாவின் எதிா்ப்புக்கு கண்டம் தெரிவித்து, தைவான் வெளியுறவு அமைச்சகம் எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த பதிவில், “ஜனநாயக நாடுகளின் தலைவா்களுக்கு இடையேயான பரஸ்பர வாழ்த்து பரிமாற்றம் குறித்த சீனாவின் எதிா்ப்பு முற்றிலும் நியாயமற்றது.

அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்கள் ஒருபோதும் நட்பை வளா்ப்பதில்லை. பரஸ்பர நன்மை மற்றும் பகிரப்பட்ட மதிப்புகள் மூலம் இந்தியாவுடன் கூட்டுறவை மேம்படுத்துவதற்கு தைவான் அா்ப்பணிப்புடன் உள்ளது” என கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.