2000 பேர்கள் உயிருடன் புதையுண்ட நாட்டில் மீண்டும் ஏற்பட்டுள்ள ஆபத்து: எச்சரிக்கும் நிபுணர்கள்
பப்புவா நியூ கினியாவில் மலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்த இடத்தில் மேலும் நிலச்சரிவுகள் ஏற்படக்கூடும் என நியூசிலாந்தின் புவியியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
உயிருடன் புதையுண்டவர்கள்
இரண்டு வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளை அதிகாரிகள் முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர். இருப்பினும் பப்புவா நியூ கினியாவின் எங்க பிராந்தியத்தில் ஏற்பட்ட மிக மோசமான நிலச்சரிவில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை முழுமையான வெளியாகவில்லை என்றாலும்,
உயிருடன் புதையுண்டவர்கள் எண்ணிக்கை 2,000 கடந்துள்ளதாகவே பப்புவா நியூ கினியா அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. மேலும், ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள இறப்பு எண்ணிக்கை 670 என்றும், இதுவரை 11 பேர்கள் மட்டும் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் பப்புவா நியூ கினியா அரசாங்கத்திற்கு நியூசிலாந்தின் புவியியல் நிபுணர்கள் குழு அனுப்பியுள்ள ஆய்வறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி மட்டுமன்றி அதன் இருபுறமும் நிலத்தின் உறுதித்தன்மை பற்றிய கவலையை எழுப்பியுள்ளனர்.
நிலச்சரிவை தூண்டிவிடக் கூடும்
மிக சமீபத்தில் இன்னொரு நிலச்சரிவுக்கு அப்பகுதியில் வாய்ப்பிருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். அந்த நிலச்சரிவானது 35 ஏக்கர் பரப்பளவில் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், துரதிர்ஷ்டவசமாக அதை தடுப்பது முடியாத செயல் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
மலையின் ஒருபகுதி இடிந்து விழுந்தது என்பது மீண்டும் செயல்படுத்தப்பட்ட பழைய நிலச்சரிவின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்றும் பருவமழையின் தொடக்கமானது மீண்டும் நிலச்சரிவை தூண்டிவிடக் கூடும் என்ற கவலை தற்போது எழுந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் குடியிருக்கும் மக்களை பெருமளவில் வெளியேற்றுவதாக எங்க மாகாண அரசாங்கம் வியாழக்கிழமை அறிவித்தது.
ஏற்கனவே நிலச்சரிவு காரணமாக சுமார் 7,000 பேர்களுக்கும் அதிகமானோர் வேறு பகுதிகளுக்கு இடபெயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பு குறிப்பிட்டுள்ளது.