பிரித்தானியாவை விட்டு அவசர அவசரமாக வெளியேறும் பணக்காரர்கள்: தேர்தல் அறிவிப்பு எதிரொலி
பிரித்தானியாவில் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பணக்காரர்கள் தங்கள் சொத்துக்களை பாதுகாப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளைத் துவங்கியுள்ளார்கள். அவற்றில் ஒன்று, பிரித்தானியாவை விட்டு வெளியேறுவது!
தேர்தல் அறிவிப்பு எதிரொலி
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் திடீரென பொதுத்தேர்தல் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, பிரித்தானியாவில் வாழும் பணக்காரர்கள், தாங்கள் முதலீடு செய்துள்ள பணத்தை திருப்பி எடுத்தல், விரைவில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படும் கட்டணங்களை செலுத்துதல் முதலான நடவடிக்கைகளைத் துவங்கியுள்ள நிலையில்,
சிலரோ நாட்டை விட்டே வெளியேற முடிவு செய்துள்ளார்கள். இந்த தகவலை நிதி ஆலோசகர்கள் தங்கள் பெயரை வெளியிடவேண்டாம் என்ற நிபந்தனையுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்கள்.
ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியானாலும் சரி, அடுத்து ஆட்சியைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படும் லேபர் கட்சியானாலும் சரி, இரண்டு கட்சிகளுமே, non-domiciled residents என அழைக்கப்படும், பிரித்தானியாவில் வாழும் பணக்காரர்களுக்கான சலுகைகளைப் பறிக்க திட்டம் வைத்துள்ளன.
(பிரதமர் ரிஷியின் மனைவியான அக்ஷதா மூர்த்திக்கு இந்த non-domiciled residents நிலை இருந்ததால் எழுந்த பிரச்சினையைத் தொடர்ந்து, அவர் பிரித்தானியாவில் வரி செலுத்த முடிவு செய்தது நினைவிருக்கலாம்).
பிரித்தானியா பெரும் பணக்காரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தங்க விசாவையும் நிறுத்திவிட்டது. ஆக, சலுகைகளும் இல்லாமல், கூடுதல் வரியும் செலுத்தும் நிலை ஏற்படலாம் என அஞ்சும் பணக்காரர்களில் சிலர், துபாய் அல்லது மொனாக்கோ போன்ற நாடுகளுக்கும், சிலர் வேறு ஐரோப்பிய நாடுகளுக்கும் செல்ல முடிவு செய்துள்ளார்கள்.
அதே நேரத்தில், அரசியல் மாற்றம் காரணமாக, வெளிநாடுகளில் வாழும் சில பணக்காரர்கள், சில விடயங்கள் தங்களுக்கு லாபமாக அமையும் என எதிர்பார்ப்பதால் பிரித்தானியாவுக்கு திரும்ப முடிவு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.