சீனாவின் மிக உயரமான அருவி… அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
ஆசியாவிலேயே மிக உயரமான அருவி என கொண்டாடப்பட்ட சீனாவின் உயரமான அருவி உண்மையில் செயற்கையானது என தற்போது அம்பலப்பட்டுள்ளது.
Yuntai அருவியின் பிறப்பிடம்
சீனாவின் Yuntai மலை முகட்டில், 321 மீற்றர் உயரத்தில் இருந்து கொட்டும் அந்த அருவி உண்மையில் குழாய் பொருத்தப்பட்ட செயற்கை அருவி என மலையேறும் வீரர் ஒருவர் கண்டுபிடித்து அம்பலப்படுத்தியுள்ளார்.
மலைக்கவைக்கும் Yuntai அருவியின் பிறப்பிடம் குறித்து அறிய விரும்பிய அந்த நபர், இறுதியில் அது குழாய் பொருத்தப்பட்ட செயற்கை அருவி என்பதை அறிந்து திகைத்துப் போனதாக தமது சமூக ஊடக பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இதனையடுத்து, ஆசியாவிலேயே மிக உயரமான அருவி, சீனாவின் பெருமிதம் என கொண்டாடப்பட்ட அந்த அருவி தொடர்பில் சமூக ஊடக பக்கங்களில், சீன மக்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
ஆனால் Yuntai சுற்றுலா நிர்வாகம் இந்த விவகாரத்தில் புதிய விளக்கமளித்துள்ளது. மழை இல்லாத காலங்களில் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் பொருட்டு உருவாக்கப்பட்டுள்ள சிறிய ஏற்பாடு அது என குறிப்பிட்டுள்ளனர்.
மொத்த அழகையும்
இதனிடையே, அந்த அருவியே சுய விளக்கமளிப்பது போல சமூக ஊடகத்தில் வெளியான கருத்து பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இதுபோன்ற ஒரு சூழலில் அனைவரையும் சந்திக்கும் விருப்பம் தமக்கு இருந்ததில்லை என்றும்,
மழை இல்லாத காலங்களில் எனது மொத்த அழகையும் பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்தவும் என்னால் உத்தரவாதமளிக்க முடியாது. இதனாலையே, ஒரு சிறு ஏற்பாடு, தம்மை நம்பிவருவோரை ஏமாற்றமால் இருக்க மட்டுமே என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக மக்கள்தொகையில் 17 சதவீதத்திற்கும் மேலானவர்கள் சீனாவில் வசிக்கும் நிலையில், உலக நன்னீர் வளங்களில் வெறும் ஆறு சதவீதம் மட்டுமே உள்ளது. மட்டுமின்றி, வசந்த காலத்தில் தெற்கு சீனாவில் உறைபனி வானிலை மற்றும் பலத்த மழை போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளை சீனா சமீபத்தில் எதிர்கொண்டது.
அத்துடன், 2022ல் இருந்தே சீனாவின் பெரும்பகுதி தொடர் வறட்சியை எதிர்கொண்டு வருகிறது. இதனால் ஏரிகள் மற்றும் ஆறுகள் அதிர்ச்சியான முறையில் வறண்டு வருகிறது.