நான் மட்டுமே பிரசாரம் செய்தேன்; அதிமுகவுக்கு வெற்றி தான் – எடப்பாடி பழனிசாமி விளக்கம்!
2024 மக்களவை தேர்தலில் கூடுதலான வாக்குகளை அதிமுக பெற்றிருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
2024 மக்களவை தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியாகின. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணிக்கு ஒரு இடம் கூட கிடைக்காதது அக்கட்சிக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இந்நிலையில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “அதிமுகவை பொறுத்தவரை நான் ஒருவன் தான் எங்கள் கட்சி வேட்பாளர்களையும், கூட்டணி வேட்பாளர்களையும் ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தேன்.
அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள், அந்தந்த தொகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது.
வெற்றியாக பார்க்கிறோம்
இதனிடையே அதிமுக கூட்டணிக்கு எதிராக பல்வேறு அவதூறு பிரசாரங்களும் மேற்கொள்ளப்பட்டன. இத்தனைக்கும் இடையில் அதிமுக இந்த தேர்தலை சந்தித்து 2019 மக்களவை தேர்தலில் பெற்ற வாக்குகளை விட ஒரு சதவீத வாக்குகளை கூடுதலாக பெற்றுள்ளது.
இதை அதிமுகவிற்கு கிடைத்த வெற்றியாக நாங்கள் பார்க்கிறோம். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் மற்ற கட்சிகளுக்காக பிரசாரம் மேற்கொண்டார்கள். ஆனால் அதிமுக கூட்டணி எந்த ஆதரவும் இல்லாமல் தேர்தலில் போட்டியிட்டு, கடந்த முறை பெற்ற வாக்குக்ளை விட 2024 மக்களவை தேர்தலில் கூடுதலான வாக்குகளை பெற்றிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.