மருத்துவமனை சிகிச்சை முடித்த ஒரு நாளுக்குள் பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மன்னர்: கொண்டாடும் மக்கள்
புற்றுநோய் சிகிச்சையின் ஒருபகுதியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சார்லஸ் மன்னர், 24 மணி நேரத்திற்குள் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளது பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.
உலகப் போர் நினைவேந்தல்
புற்றுநோய் சிகிச்சையில் இருந்துவரும் சார்லஸ் மன்னர், சிகிச்சையின் ஒருபகுதியாக செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அதன் அடுத்த நாள் உலகப் போர் நினைவேந்தல் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டுள்ளது தற்போது வியப்பாக பேசப்பட்டு வருகிறது.
புதன்கிழமை Portsmouth பகுதிக்கு பயணப்பட்ட சார்லஸ் மன்னர் அங்கு முன்னெடுக்கப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளதுடன், 8 நிமிடங்கள் வரையில் சிறப்புரையும் ஆற்றியுள்ளார்.
மருத்துவர்களின் ஆலோசனையை ஏற்று, அவர் 45 நிமிடங்களில் அங்கிருந்து கிளம்பியுள்ளார். இருப்பினும் முன்னாள் போர் வீரர்கள் 21 பேர்களுடன் உரையாடவும் அவர்களுடன் நேரம் செலவிடவும் செய்துள்ளார்.
இதனையடுத்து 80வது ஆண்டுவிழா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் பொருட்டு 125 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள Normandy-க்கு பயணப்பட்டார். அங்கே பிரித்தானிய நினைவேந்தல் நிகழ்வில் சிறப்புரையாற்றியுள்ளார்.
மன்னருக்கு பதிலாக
இருப்பினும், சார்லஸ் மன்னர் சிகிச்சையில் இருப்பதால், உலகத் தலைவர்கள் 25 பேர் கலந்துகொண்ட பொது நிகழ்ச்சியில் மன்னருக்கு பதிலாக வேல்ஸ் இளவரசர் வில்லியம் பங்கேற்றுள்ளார்.
ஒமாஹா கடற்கரையில் உள்ளூர் நேரப்படி 3.30 முதல் 5.30 வரை நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தாமதம் காரணமாக 7 மணி வரையில் உலகத் தலைவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், மருத்துவர்கள் குழுவின் ஒப்புதலுடனே சார்லஸ் மன்னர் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளதாக கூறுகின்றனர்.