நான்கு சடலங்கள், 11 டன் குப்பை… உலகின் உயரமான பகுதியில் ராணுவ நடவடிக்கை
இந்த ஆண்டு இதுவரை உலகின் உயரமான சிகரத்தில் இருந்து நான்கு சடலங்கள், ஒரு எலும்புக்கூடு, 11 டன் குப்பைகளை அகற்றியுள்ளதாக நேபாள ராணுவம் தெரிவித்துள்ளது.
200 பேர்களின் சடலங்கள்
உலகின் உயரமான எவரெஸ்ட் மலை சிகரத்தில் இருந்து, மலையேறும் போது மரணமடைந்துள்ள 200 பேர்களின் சடலங்களை அப்புறப்படுத்த நேபாள ராணுவம் போராடி வருவதாக கூறப்படுகிறது.
சமீப ஆண்டுகளில் எவரெஸ்ட் மலை சிகரம் குப்பைகளால் நிரம்புவதாக குறிப்பிட்டு, சுத்தம் செய்யும் பணிகளை நேபாள ராணுவம் முன்னெடுத்து வருகிறது. ஆண்டு பிறந்து கடந்த 5 மாதங்களில் 55 நாட்கள் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்ட நேபாள ராணுவம் 11 டன் குப்பைகளை அப்புறப்படுத்தியுள்ளது.
அத்துடன் நான்கு சடலங்கள், ஒரு எலும்புக்கூடு என எவரெஸ்ட் மலை சிகரத்தில் இருந்து மீட்டுள்ளது. ஆனால், நிபுணர்களின் கணிப்பின்படி, 200 சடலங்கள் மற்றும் 50 டன் குப்பைகள் எவரெஸ்ட் மலை சிகரத்தில் இன்னும் எஞ்சியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 2019 முதல் 5 முறை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் 114 டன் குப்பைகள், 14 சடலங்கள் மற்றும் சில எலும்புக்கூடுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.
421 பேர்களுக்கு அனுமதி
இந்த ஆண்டு அதிகாரிகள் தரப்பு சுதாரித்துக்கொண்டதுடன், குப்பைகளை குறைப்பதற்கும் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கும் என கண்காணிப்பு கருவிகளை மலையேறுவோரை பயன்படுத்த வைத்தனர்.
மட்டுமின்றி, மே மாதம் முடிந்த முதற்கட்ட மலையேறும் தொடரில் 421 பேர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் 8 பேர்கள் மரணமடைந்துள்ளனர் அல்லது மாயமாகியுள்ளனர் என கூறப்படுகிறது.
2023ல் 478 பேர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதில் 19 பேர்கள் மரணம் அல்லது மாயமாகியுள்ளனர் என கூறப்படுகிறது.