அழகிய சுவிஸ் மலைகளில் ஒரு அருவருக்கத்தக்க பிரச்சினை: சமாளிக்க ஆலோசனை
சுவிட்சர்லாந்தின் அழகிய மலைகளில் மலையேற்றத்துக்குச் செல்வோர் அருவருப்பான ஒரு சவாலை எதிர்கொள்ளும் நிலை தற்போது அதிகமாகிவருகிறது.
சுவிஸ் மலைகளில் ஒரு அருவருக்கத்தக்க பிரச்சினை
ஒரு காலத்தில் அழகானவையாக காணப்பட்ட சுவிட்சர்லாந்தின் மலைப்பாதைகளில் சமீப காலமாக ஒரு பிரச்சினை அதிகரித்துள்ளது. அதாவது, ஆங்காங்கே இயற்கை உபாதைகளை மனிதர்கள் கழிப்பதால், நடந்து செல்வோர் மூக்கை மூடிக்கொண்டு செல்லும் ஒரு நிலை காணப்படுகிறது.
இந்த பிரச்சினையை சமாளிக்க சுவிட்சர்லாந்தின் இரண்டு பெரிய அமைப்புகள் கைகோர்க்கவேண்டியதாகியுள்ளது. The Swiss Alpine Club மற்றும் the Swiss Hiking Trail Association என்னும் அந்த அமைப்புகள், மனிதக் கழிவுகள் மன்ணோடு மண்ணாக மக்கிப்போக ஐந்து ஆண்டுகள் ஆவதுடன், அவை உள்ளூர் சுற்றுச்சூழல் மண்டலத்தின் மீதும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றன.
சமாளிக்க ஆலோசனை
ஆகவே, மலைகளுக்குச் செல்வோர் இயற்கை உபாதைகளைக் கழிக்க நேர்ந்தால் என்ன செய்வது என்பதை விளக்க மூன்று வீடியோக்களை வெளியிட்டுள்ளன அந்த அமைப்புகள்.
இயற்கை உபாதைகளைக் கழிப்போர், ஒரு பெரிய கல்லைப் பயன்படுத்தி, ஒரு பள்ளம் தோண்டி, அந்தப் பள்ளத்தை கழிப்பறைபோல பயன்படுத்திவிட்டு, மண்ணைப் போட்டு அந்த பள்ளத்தை மூடிவிடவேண்டும் என்கின்றன அந்த அமைப்புகள். அத்துடன், டாய்லெட் டிஷ்ஷூவை பயன்படுத்தினால், அதை எரிக்கக்கூடாது என்றும், அப்படி அவற்றை எரித்தால், காட்டுத்தீ ஏற்படும் அபாயம் ஏற்படலாம் என்றும் அந்த அமைப்பினர் அந்த வீடியோக்களில் தெரிவித்துள்ளார்கள்.