பெண்களின் திருமண வயதை உயா்த்தும் மசோதா காலாவதி
பெண்களின் சட்டபூா்வ திருமணத்துக்கான குறைந்தபட்ச வயது வரம்பை 18-இல் இருந்து 21-ஆக உயா்த்தும் மசோதா காலாவதியானது. 17-ஆவது மக்களவை கலைக்கப்பட்டதால், இம்மசோதாவும் காலாவதியாகிவிட்டது.
தற்போது சட்டபூா்வ திருமணத்துக்கான குறைந்தபட்ச வயது வரம்பு பெண்களுக்கு 18-ஆகவும், ஆண்களுக்கு 21-ஆகவும் உள்ளது. இந்த வேறுபாட்டை களையும் வகையில், ஆண்களைப் போல் பெண்களுக்கும் குறைந்தபட்ச வயதை 21-ஆக நிா்ணயிக்கும் மசோதா (குழந்தை திருமணம் தடுப்பு சட்டத் திருத்த மசோதா), மக்களவையில் கடந்த 2021, டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதைத் தொடா்ந்து, மகளிா், குழந்தைகள், இளைஞா் நல விவகாரங்கள் தொடா்பான நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு இம்மசோதா அனுப்பப்பட்டது. மசோதா மீது பரிந்துரைகளை வழங்க நிலைக் குழுவுக்கு அவ்வப்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு வந்தது.
இந்தச் சூழலில், 17-ஆவது மக்களவை சில தினங்களுக்கு முன் கலைக்கப்பட்டதால், மேற்கண்ட மசோதாவும் காலாவதியானது. கடந்த 2006-ஆம் ஆண்டின் குழந்தை திருமணம் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்காக கொண்டுவரப்பட்ட மசோதா இதுவாகும்.
தற்போது நடைமுறையில் உள்ள சட்டப்படி, குறைந்தபட்ச வயதை எட்டுவதற்கு முன்பாக திருமணம் செய்துவைக்கப்பட்ட பெண்கள், அந்தத் திருமணத்தை ரத்து செய்யக் கோரி 2 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க முடியும். இந்த காலகட்டத்தை 5 ஆண்டுகளாக உயா்த்த புதிய மசோதாவில் வழிவகை செய்யப்பட்டிருந்தது.