;
Athirady Tamil News

சூடு பிடிக்கும் ஜனாதிபதி தேர்தல் களம் : 30 வருட யுத்தத்தை முடித்த தலைவர் மொட்டுக் கட்சியிடம்

0

நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பினை நாங்கள் ஏற்போம். 30 வருடகால யுத்தத்தை நிறைவு செய்து நாட்டை அபிவிருத்தியடையச் செய்த தலைவர் எம்மிடம் உள்ளார் என்று பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

ரத்தொட்ட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஊழல் இல்லாத அரச நிர்வாகம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa) தனது முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தை ரத்தொட்ட பகுதியில் நடத்தினார். ஆகவே எமது அரசியல் பயணத்தில் ரத்தொட்ட பகுதி இன்றியமையாதது.

69 இலட்ச மக்கள் பாரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கோட்டாபய ராஜபக்ச(Gotabya Rajapaksa) தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தார்கள். உள்நாட்டு உற்பத்திகளுக்கு முக்கியத்துவம் வழங்கி தேசிய தொழிற்றுறையை மேம்படுத்திக்கொண்டிருந்த வேளை துரதிர்ஷ்டவசமாக கோவிட் பெருந்தொற்று தாக்கத்துக்கு முகங்கொடுக்க நேரிட்டது.

கோவிட் பெருந்தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும்போது பொருளாதார ரீதியில் நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்பதை நன்கு அறிவோம். கோவிட் பெருந்தொற்று தாக்கத்துடன் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை ஒரு தரப்பினர் தமது அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக்கொண்டார்கள்.

அரசியல் சூழ்ச்சியினால் தான் எமது அரசாங்கம் வீழ்த்தப்பட்டது. நெருக்கடியான தீர்வு காண்பதற்கு நாடாளுமன்றத்தின் ஊடாக தற்காலிக தீர்மானத்தை எடுத்தோம்.

சர்வதேச நாணய நிதியத்தை மாத்திரம் கொண்டு பொருளாதார ரீதியான தீர்மானங்களை எடுக்க முடியாது. நாட்டுக்கு எதிரான எவ்வித தீர்மானங்களையும் நாங்கள் எடுக்க போவதில்லை.

நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பினை நாங்கள் ஏற்போம். 30 வருடகால யுத்தத்தை நிறைவு செய்து நாட்டை அபிவிருத்தியடையச் செய்த தலைவர் எம்மிடம் உள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. திருடர்களை பிடிப்பதாக குறிப்பிட்டுக்கொண்டு அரசியல் செய்யும் நிலைப்பாட்டில் இருந்துகொண்டு பிரதான எதிர்க்கட்சிகள் செயற்படுகின்றன. ஊழல் இல்லாத அரச நிர்வாகத்தை எம்மால் உருவாக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.