ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்… தீவிர வலதுசாரிகள் ஆதிக்கம்: எச்சரிக்கும் நிபுணர்கள்
ஞாயிறன்று முன்னெடுக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சிகள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.
பல இடங்களில் வெற்றி
இதில் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் மிக மோசமான பின்னடைவை எதிர்கொண்டுள்ளார் என்றே தெரிய வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் மொத்தமுள்ள 27 நாடுகளில், கடந்த 2019 தேர்தலைவிடவும் தீவிர வலதுசாரிகள் பெரும் ஆதிக்கம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ஐரோப்பாவின் தீவிர வலதுசாரி கட்சிகள் பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. குறிப்பாக பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஆஸ்திரியா நாடுகள் முதலிடத்தை தக்கவைக்க, ஜேர்மனியின் AfD இரண்டாமிடத்திற்கு வந்துள்ளது.
நெதர்லாந்திலும் தீவிர வலதுசாரிகள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். இந்த நிலையிலேயே, தீவிர வலதுசாரிகளின் வெற்றி கொண்டாடப்படும் வகையில் இல்லை என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
மட்டுமின்றி, இவை இரண்டாம் வரிசை தேர்தல் என்பதை மறந்துவிடக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் தீவிர வலதுசாரி அமைப்புகளான ID மற்றும் ECR ஒன்றிணைந்து ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பலம் பொருந்திய அமைப்பாக மாறுமா என்ற கேள்விக்கு, தற்போதைய சூழலில் இல்லை என்றே பதிலளித்துள்ளனர்.
அதே பொறுப்பில் நீடிப்பார்
இந்த ECR அமைப்பை சேர்ந்த கட்சியே தற்போது இத்தாலியில் ஆட்சியில் உள்ளது. இத்தாலிய தீவிர வலதுசாரி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் இத்தாலியின் சகோதரர்கள் கட்சி தேர்தலில் முதலிடம் பிடித்துள்ளது.
மேலும், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் முடிவுகளில் இனி தீவிர வலதுசாரிகளின் செல்வாக்கு அதிகமாக இருக்கும் என்றே நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
அத்துடன் நம்பிக்கை தரும் வகையில், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் Ursula von der Leyen மேலும் 5 ஆண்டுகளுக்கு அதே பொறுப்பில் நீடிப்பார் என்றே தெரிய வந்துள்ளது.
மொத்தம் 360 மில்லியன் தகுதியான வாக்காளர்களை கொண்ட இந்த தேர்தலில் வாக்குப்பதிவு 51 சதவீதம் என்றே கூறப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத உச்சம் இதுவென்றும் கூறுகின்றனர்.