;
Athirady Tamil News

ஒரே நாளில் 274 பேர்கள் படுகொலை… சில மணி நேரத்தில் பதவியை ராஜினாமா செய்த அமைச்சர்

0

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான கருத்துவேறுபாடு காரணமாக அமைச்சரவையில் இருந்து பென்னி காண்ட்ஸ் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நெதன்யாகு கடினப்படுத்துகிறார்
ஹமாஸ் படைகளை மொத்தமாக வெல்லும் வாய்ப்பை பெஞ்சமின் நெதன்யாகு கடினப்படுத்துகிறார் என்றே பென்னி காண்ட்ஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். அரசியல் ஆதாயத்தைக் கடந்து அக்டோபர் 7ம் திகதி சிறை பிடிக்கப்பட்ட அனைவரையும் மீட்கும் நடவடிக்கைகளும் தாமதமாவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கனத்த இதயத்துடன் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டுள்ள பென்னி காண்ட்ஸ், ஆனால் இஸ்ரேல் ராணுவம் மீது தமக்கு முழு நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளார்.

பென்னி காண்ட்ஸ் விவகாரம் தொடர்பில் பதிலளித்துள்ள நெதன்யாகு, ராணுவ நடவடிக்கைகளை தற்போது கைவிடுவதற்கு இது உரிய நேரமல்ல என்றார். சமீப நாட்களாகவே இரு தலைவர்களுக்கும் கருத்து மோதல் நீடித்து வந்தது.

காஸா போர் தொடர்பில் விரிவான திட்டம் என்ன என்பது குறித்து ஜூன் 8ம் திகதிக்குள் நெதன்யாகு வெளிப்படையாக தங்களிடம் விளக்க வேண்டும் என்று கூறிய நிலையிலேயே மோதல் ஏற்பட்டது.

சனிக்கிழமையே பென்னி காண்ட்ஸ் தமது ராஜினாமாவை அறிவிக்க இருந்தார். ஆனால் பணயக்கைதிகள் நால்வர் இஸ்ரேலிய ராணுவத்தால் மீட்கப்பட்டதாக தகவல் வெளியானதை அடுத்து, தமது முடிவை தாமதப்படுத்தி வந்தார்.

இஸ்ரேல் மீதான நம்பகத்தன்மை
பென்னி காண்ட்ஸ் உண்மையில் நடுநிலையாளர் என்றே கூறப்படுகிறது. ஆனால் ஹமாஸ் படைகள் முன்னெடுத்த அக்டோபர் தாக்குதலை அடுத்தே அமைச்சரவையில் இணைந்துள்ளார்.

பென்னி காண்ட்ஸ் விலகியுள்ளதால், இனி அரசாங்கத்திற்குள் நெதன்யாகு தீவிர வலதுசாரி கொள்கை கொண்டவர்களை நம்பியிருப்பார் என்றே கூறப்படுகிறது.

மேலும் நான்கு பணயக்கைதிகளை காப்பாற்ற இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 270 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்ட சம்பவம் வெளிவரும் நிலையில் அமைச்சரவையில் இருந்து பென்னி காண்ட்ஸ் விலகியுள்ளார்.

பென்னி காண்ட்ஸ் அமெரிக்காவுடன் இணக்கமாக செயல்பட்டார் என்பதுடன், இஸ்ரேல் மீதான நம்பகத்தன்மையை சர்வதேச கூட்டாளி நாடுகளில் அதிகரிக்க செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.