;
Athirady Tamil News

8ஆவது சமகால முகாமைத்துவ சர்வதேச ஆய்வு மாநாடு நாளை ஆரம்பம்!

0

“உலகளாவிய நிலைபேண் தன்மைக்கான ஊக்கமளிக்கும் மாற்றம்” என்ற ஆய்வுக் கருப்பொருளிலான 8ஆவது சமகால முகாமைத்துவ சர்வதேச ஆய்வு மாநாடு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீட மண்டபத்தில் நாளை ஆரம்பமாகவுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் ஏற்பாட்டில் நாளை 12 மற்றும் நாளை மறுதினம் 13 ஆகிய இரு தினங்களும் இந்த ஆய்வு மாநாடு இடம்பெறவுள்ளது.
முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடாதிபதி பேராசிரியர் ந. கெங்காதரன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த ஆய்வு மாநாட்டில் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராஜா பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் சைமன் பெல் மற்றும் இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் டி.என்.ஜெயந்தா ஆகியோர் முதன்மைப் பேச்சாளர்களாகக் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கவுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆய்வாளர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ள இந்த ஆய்வு மாநாட்டில் வணிகங்களை முகாமை செய்தல், மனிதவள முகாமைத்துவம், நிறுவன நடத்தை, வணிகத் தொழில்நுட்பம், நிதி மற்றும் கணக்கியல், சந்தைப்படுத்தல், சுற்றுலாத்துறை மற்றும் பொருளாதார சமூககொள்கைகள் போன்ற ஆய்வுப் பரப்புகளை கொண்ட ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

நிலைபேண் தன்மைக்கான ஊக்கமளிக்கும் மாற்ற விருத்தியினை ஏற்படுத்தகூடிய சர்வதேச அளவிலான அபிவிருத்தியை நோக்கியதான பார்வையை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் நாளை மறுதினம் 13 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகளைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காணும் அதேவேளை முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடம் இருபத்தி ஐந்து வருடங்களை பூர்த்தி செய்து வெள்ளிவிழாக் காண்கின்றது.

பல்கலைக்கழகத்தின் பொன்விழா மற்றும் பீடத்தின் வெள்ளிவிழாவின் அடையாளமாக இந்த மாநாடு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.