மாதச் சம்பளத்தை பெறாமல் புறக்கணித்த பெருந்தோட்ட தொழிலாளர்கள் !
வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டதன் படி 1,700 ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்காதமையால் நேற்று (10) தங்களுக்கு வழங்கப்பட்ட மாதச் சம்பளத்தை ஏற்பதற்கு பெருந்தோட்ட நிறுவனங்கள் சிலவற்றின் தொழிலாளர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு அமைவாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த மொத்த சம்பளம் 1700 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது.
இதனடிப்படையில், அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை மாதாந்த சம்பளத்தில் உள்ளடக்காதமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பதுளை, கண்டி, நுவரெலியா மற்றும் ஹப்புத்தளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சம்பள பெற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளனர்.
தோட்ட முகாமையாளர்கள்
இதனால் சில பெருந்தோட்டங்களில் நேற்று சம்பளம் வழங்குவதற்காகச் சென்றிருந்த தோட்ட முகாமையாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் சில பகுதிகளில் சம்பளத்தை தோட்ட நிறுவனங்களில் வைத்து பாதுகாக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, 1700 ரூபாயாக அதிகரிக்கப்பட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் முதல்முதலாக மாத்தளை, எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நேற்று வழங்கப்பட்டுள்ளது.
சம்பள அதிகரிப்பு
இந்த நிலையில், இம்முறை 1,700 ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்காத கம்பனிகள் அடுத்த மாத சம்பளத்தில் இருந்து அதிகரிப்பட்ட சம்பளத்தையும் இம் மாத நிலுவை தொகையையும் வழங்குவதாக தெரிவித்துள்ளன.
மேலும், எவ்வாறாயினும் இலங்கை பெருந்தோட்ட நிறுவனம் மற்றும் தோட்ட உரிமையாளர்கள் சங்கமும் இவ்வாறான சம்பள அதிகரிப்புக்கு உடன்படப்போவதில்லை என தொடர்ந்தும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.