கனடாவில் வலியுடன் மருத்துவமனைக்கு சென்ற பெண்: எக்ஸ்ரேயில் தெரிந்த பயங்கரம்
கனடாவில், தோள் மற்றும் கால்வலியால் தவித்துவந்த ஒரு பெண் மருத்துவமனைக்குச் செல்ல, அவரது எக்ஸ்ரே பெரிய உண்மை ஒன்றை வெளிக்கொண்டுவந்தது.
வலியுடன் மருத்துவமனைக்குச் சென்ற பெண்
ஒன்ராறியோவைச் சேர்ந்த Giovanna Ippolito, தோள் மற்றும் கால்வலியால் தவித்துவந்துள்ளார். ஒருநாள் அவர் மருத்துவமனைக்குச் சென்றபோது அவருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டுள்ளது.
அந்த எக்ஸ்ரே பயங்கர உண்மை ஒன்றை வெளிக்கொணர்ந்தது. ஆம், அவரது முதுகெலும்புக்குள் உடைந்த ஒரு ஊசியின் ஒரு பெரிய துண்டு இருப்பது தெரியவந்தது.
அந்த ஊசியுடனேயே அவர் பல ஆண்டுகளாக வாழ்ந்துவந்துள்ளார். அத்துடன், அந்த ஊசிதான் தனது தோள் மற்றும் கால்வலிக்கும் காரணம் என்பது அவருக்கு பிறகுதான் தெரியவந்துள்ளது.
மருத்துவர்கள் கவனக்குறைவால் செய்யும் தவறு
கனடாவில், 2023ஆம் ஆண்டில் மட்டும், மருத்துவர்களின் கவனக்குறைவு காரணமாக, சுமார் 175,000 நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக, கனேடிய உடல் நல தகவல் நிறுவனமான Canadian Institute for Health Information (CIHI) தெரிவித்துள்ளது.
மேலும், 2022இல் 168,000 நோயாளிகளும், 2021இல் 157,000 நோயாளிகளும், மருத்துவர்களின் கவனக்குறைவால் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்கள்.
இவர்களில், Giovannaவும் ஒருவர். அவரது மயக்க மருந்து நிபுணரின் தவறு, Giovanna வாழ்நாள் முழுவதும் முதுகுத்தண்டில் ஊசி ஒன்றுடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.
தவறை ஒப்புக்கொள்ள மறுக்கும் மருத்துவமனை
விடயம் என்னவென்றால், Giovannaவின் மருத்துவர் தவறுதலாக ஊசியை அவரது முதுகெலும்பில் விட்டுவிட்டாரா, அதாவது, அது அவருக்குத் தெரியுமா, தெரியாதா, அல்லது தவறு நடந்தும் அவர் அதை மறைத்துவிட்டாரா என்ற எந்த கேள்விக்கும் பதிலில்லை.
சொல்லப்போனால், அது தொடர்பாக Giovanna புகாரளித்தும் மருத்துவ அமைப்பு முறையான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. தனது இரண்டு பிள்ளைகளும் பிறக்கும்போது, முதுகெலும்பில் ஊசிபோட்டபோது இந்த தவறு நடந்திருக்கலாம் என கருதுகிறார் Giovanna.
ஆனால், அவரது குற்றச்சாட்டை நிரூபிக்க எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. என்றாலும், பதில் கிடைக்காமல் விடப்போவதில்லை என போராடி வரும் Giovanna, ஆறு ஆண்டுகளாக பதிலுக்காக காத்திருக்கிறார்.