துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையின் பொறுப்பற்ற செயல் : விசனத்தில் பெற்றோர்கள்
முல்லைத்தீவு (Mullaitivu) துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றின் பொறுப்பற்ற செயற்பாடு தொடர்பில் பெற்றோர் தங்கள் விசனத்தை வெளிப்படுத்தி கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
துணுக்காய் கல்வி வலயம் இது தொடர்பில் தன் கண்ணை மூடிக் கொண்டிருக்கின்றதா? என்ற கேள்வியை எழுப்புவதோடு பாடசாலை அதிபரின் பொறுப்பற்ற நிர்வாக செயற்பாடுகளால் பெற்றோர் பாதிக்கப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தரம் 6 முதல் உயர்தரம் வரை கற்றல் செயற்பாட்டை வழங்கி வரும் இந்த பாடசாலை 1000 தேசிய பாடசாலைகள் செயற்பாட்டிற்குள் உள்ளீர்க்கப்பட்டிருந்தது.
மாணவர்களுக்கான மேலங்கியினை (பாடசாலையினை இனம் காட்டிக்கொள்ள பயன்படும் கோட்) தைப்பதற்கென மாணவர்களிடம் இருந்து பணம் அறவிடப்பட்டு அது தைக்கப்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையிலும் இது வரை தைக்கப்பட்ட கோட்கள் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை என பெற்றோர்கள் தங்கள் விசனத்தினை வெளிப்படுத்தியிருந்தனர்.
தைக்கப்பட்ட மேலோங்கிகள்
பாடசாலைச் சீருடைக்கு மேலாக அணியும் மேலங்கி தைக்கப்பட்டு ஒரு மாத காலம் முடிவடைந்துள்ளது.எனினும் அவை மாணவர்களின் பயன்பாட்டுக்கு இதுவரை வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டப்படுகின்றது.
இதன் முதல் கட்டமாக பாடசாலையில் உள்ள 47 மாணவர்களிடமிருந்து ஒருவருக்கு ரூபா 2600 (இரண்டாயிரத்து அறுநூறு ரூபா) மட்டும் என்ற அடிப்படையில் நிதி அறவிடப்பட்டுள்ளது.
சில மாணவர்கள் உரிய மொத்தத் தொகையினை வழங்காத சூழலில் சேர்க்கப்பட்ட மொத்தத் தொகையாக ரூபா 98 000 ஆக இருக்கின்றது.
மேலங்கிகளை தைப்பதற்கென தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் இன்னமும் செலுத்த வேண்டிய மீதித்தொகையாக ரூபா 24 200 மட்டும் இருப்பதாகவும் மொத்தமாக சேர்த்திருக்க வேண்டிய தொகையாக ரூபா 1 22 200 என பாடசாலையின் உள்ளகத் தகவல் ஒன்றின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
புதுக்குடியிருப்பில் உள்ள ஒரு தையலகம் ஒன்றில் பாடசாலை அதிபரின் தன்னிச்சையான முடிவுகளுக்கமைய மேலங்கிகளை தைப்பதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டு அதற்கான முயற்சிகளில் அந்த தையலகம் ஈடுபட்டிருந்தது.
ஆடைகள் தைத்து முடிக்கப்பட்டு ஒரு மாத காலத்திற்கு முன்னரே பாடாசலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன என இப்பாடசாலையின் பழைய மாணவர் ஒருவர் இது தொடர்பில் தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
பொறுப்பற்ற செயல்
பாடசாலையின் நிதி சேகரிப்பு மற்றும் வேலைகளை வெளியாட்களுக்கு வழங்குவது தொடர்பான சுற்று நிரூபங்களில் காட்டப்பட்டவாறான அறிவுறுத்தல்களை பின்பற்றவில்லை.
பாடசாலை அபிவிருத்திக் குழுவுடனோ பழைய மாணவர் சங்கத்துடனோ பாடசாலையின் தற்போதைய நிர்வாகம் எத்தகைய கலந்துரையாடலையும் மேலங்கிகள் தைப்பது தொடர்பாக செய்து கொள்ளவில்லை என பாடசாலை நிர்வாகம் மீது அவர்கள் குற்றஞ்சாட்டி வரும் நிலையும் இருக்கின்றது.
ஆசிரியர்களின் அறிவுறுத்தலில் மேலங்கிகள் தைப்பதற்கான நிதி சேகரிக்கப்பட்ட பின்னர் மாணவர்களின் சுய விருப்பின் பெயரிலேயே நிதி சேகரிப்பும் மேலங்கி தைப்பதற்கான முயற்சியும் எடுக்கப்படுவதாகவும் இதற்கு பாடசாலை நிர்வாகம் மாணவர்கள் மீது எத்தகைய அழுத்தங்களும் வழங்கவில்லை என்ற சாரம் கொண்ட கடிதங்களில் மாணவர்கள் ஒப்பமிட கேட்டுக்கொள்ளப்பட்டு அவர்களது ஒப்பங்கள் பெறப்பட்டதாகவும் உறுதிப்படுத்த முடியாது ஒரு உள்ளகத் தகவல் இருப்பது நோக்கத்தக்கது.
எது எவ்வாறு இருப்பினும் தைக்கப்பட்ட மேலங்கிகளை மாணவர்களுக்கு வழங்காது வைத்திருப்பது ஏன் என்ற கேள்வி தான் பெற்றோரிடையே சலனத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
மேலங்கிகள் தைக்கப்பட்டுள்ள மாணவர்களுள் சிலர் இந்த வருடம் உயர்தரப் பரீட்சையினை எழுதவுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பழைய மாணவர் சங்கம்
பழைய மாணவர் சங்கம் இதற்கான செலவுகளைப் பொறுப்பெடுப்பதாக கூறிய போதும் பாடசாலை அதிபருக்கும் பழைய மாணவர் சங்கத்திற்கும் இடையில் நீண்ட நாட்களாக நிலவி வரும் முரண்பாடுகளினால் அதிபர் ,பழைய மாணவர் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்கவில்லை என அப் பாடசாலையின் பழைய மாணவர் ஒருவர் இது தொடர்பில் குறிப்பிட்டார்.
அண்மையில் வெளியாகி இருந்த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக பரீட்சை எழுதியிருந்த கலைப் பாடப்பிரிவு மாணவியொருவருடனான உரையாடலின் போது பாடசாலைக்கும் பழைய மாணவர் சங்கத்திற்கும் இடையில் நிலவி வரும் முரண்பாடுகளினால் மாணவர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பில் கருத்துரைத்துள்ளார்.
வழமையாக பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் உயர்தர மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல் மற்றும் மீட்டல் கருத்தரங்குகள் இம்முறை தங்களுக்கு நடைபெறவில்லை.
கருத்தரங்குகளுக்கான நிதியினை பழைய மாணவர் சங்கத்திடம் இருந்து பாடசாலை நிர்வாகத்தினால் பெற முடியாத சூழல் இருக்கின்றது. பழைய மாணவர் சங்கத்தினைப் பயன்படுத்தி பாடசாலை மாணவர்களின் கல்வித் தரத்தினை உயர்த்தவோ அன்றி மாணவர்களின் தேசிய பரீட்சை பெறுபேறுகளை அதிகரிக்கவோ முயற்சிக்கப்படாத சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலை மாற்றப்பட்டு இனிவரும் பரீட்சைகளை எதிர்கொள்ளவுள்ள மாணவர்களுக்கென்றாலும் நாம் எதிர்கொண்ட கஷ்டங்களை எதிர்கொள்ளாதிருப்பதற்கான செயற்பாடுகளை உரிய தரப்பினர் கருத்தில் எடுத்துச் செயற்பட வேண்டும் என்ற தொனிப்பொருளில் தன் கருத்துக்களை ஆதங்கத்தோடு பகிர்ந்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
கற்றலுக்கு முன்னுரிமை
வறுமையில் உள்ள ஒரு குடும்பத்தில் இருந்து கற்பதற்காக பாடசாலை செல்லும் மாணவர்களின் நிலையில் இருந்து தற்போதைய பாடசாலை நிர்வாகங்கள் சிந்திப்பதில்லை.
இலவச கல்வி என்ற தொனிப் பொருளில் இயங்கும் அரசாங்கப் பாடசாலைகளில் மாணவர்களிடம் அறவிடப்படும் பணத்தினளவு எது இலவசக் கல்வி என்ற கேள்வி எழுப்புகின்றது.
சிக்கனமாக வாழ்ந்து கொண்டு கிடைக்கும் பணத்தில் பிள்ளைகளை படிப்பிக்க முயன்றால் கற்றல் செயற்பாடுகளுக்கு மேலதிகமாக ஆடம்பரச் செலவுகளை பாடசாலைகள் மாணவர்கள் மீது திணிக்கின்றன.
இதனால் கல்விக்காக ஒதுக்கும் செலவுகளுக்கு மேலதிகமாக செலவிட வேண்டி இருப்பதாக அன்றாட கூலி வேலைக்கு சென்று தன் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பும் தந்தையொருவருடன் மேற்கொண்டிருந்த உரையாடலின் போது பாடசாலைகளின் ஆடம்பரச் செலவுகள் பற்றிய தன் ஆதங்கத்தினை அவர் வெளிப்படுத்தி இருந்தார்.
பாடசாலை அதிபர் மற்றும் வலயக்கல்விப் பணிப்பாளர்கள் பொறுப்புடன் செயற்பட்டால் இத்தகைய துயர் ஏற்படாது என்பது திண்ணம்.
நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து இன்னமும் மீண்டு வராத சூழலில் பாடசாலைகளின் இத்தகைய பொறுப்பற்ற செயற்பாடுகளை யார் கட்டுப்படுத்தி கல்வி கற்றலுக்கு முன்னுரிமை கொடுக்கும் படி நெறிப்படுத்தப் போகின்றனர்?
தீர்க்கப்படாது நீண்டு செல்லும் அறியப்பட்டு உறுத்திப்படுத்தப்பட்ட பிரச்சினைகளை அதிகம் கொண்டதும் அவற்றுக்கான உரிய நடவடிக்கைகள் எவற்றையும் இதுவரை எடுத்து மாற்றங்களை ஏற்படுத்த முடியாத பாடசாலைகளை நிர்வகித்து வரும் வடக்கின் கல்வி வலயங்களில் ஒன்றாக துணுக்காய் கல்வி வலயம் இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.