;
Athirady Tamil News

புளொட் – தேசிய மக்கள் சக்தி தலைவர்கள் சந்திப்பு

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக, தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்கவுக்கும் புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று(11) சித்தார்த்தன் எம்பியின் கந்தரோடை இல்லத்தில் நடைபெற்றது.

இச் சந்திப்பில், தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, தேசிய மக்கள் சக்தியின் மத்திய செயற்குழுவின் உறுப்பினரும் யாழ் மாவட்ட அமைப்பாளருமான இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் புளொட் அமைப்பின் மத்தியகுழு உறுப்பினர் கௌதமன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

ஓன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இச்சந்திப்பின்போது, தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாக அதாவது அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக தங்களது கட்சி எடுத்துள்ள நிலைப்பாடு என்ன என்பது இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை. ஆகவே அதிகாரப் பரவாக்கல் தொடர்பாக தெளிவான நிலைப்பாட்டினை தமிழ் மக்களுக்கு நீங்கள் வெளிப்படுத்த வேண்டும் எனவும்,

இணைந்த வடக்கு கிழக்கை நீதிமன்றத்தினூடாக தனித்தனி மாகாணங்களாக பிரிப்பதற்கு பிரதான பங்காளியாக தங்களது ஜே.வி.பி கட்சி செயற்பட்ட விடயத்தில் எம் மக்கள் மத்தியில் இன்றுவரை அதிருப்தி இருப்பதால் இவ்விடயத்தில் தேசிய மக்கள் சக்தியின் உறுதியான நிலைப்பாட்டினை நீங்கள் வெளிப்படுத்தும் பட்சத்தில், உங்கள் கட்சி சம்பந்தமான தமிழ் மக்களது மனநிலையில் மாற்றம் ஏற்படலாம் எனவும் புளொட் தலைவர் சித்தார்த்தன் தெளிவுபடுத்தினார்.

அதேநேரத்தில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நியமிப்பதற்கு, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் அங்கத்துவம் வகிக்கின்ற ஐந்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளோம். சமூக மட்ட அமைப்புக்களும் அதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றன. தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியாக நாங்கள் முழுமையாக அவருடனேயே செயற்படுவோம் என்பதையும் சித்தார்த்தன் தெரிவித்தார்.

தொடர்ந்து, ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் காணப்படும் பிந்திய நிலைமைகள் பற்றி கலந்துரையாடப்பட்டதோடு, எதிர்காலத்திலும் தொடர்ந்து சந்திப்புக்களை மேற்கொள்வதற்கு இரு தரப்பிலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.