இந்திய கோடீஸ்வரக் குடும்பம் மீது ஆட்கடத்தல் வழக்கு: வேலைக்காரப்பெண்ணை தாய் போல் நடத்தியதாக விளக்கம்
இந்திய கோடீஸ்வரக் குடும்பம் ஒன்றின்மீது, சுவிட்சர்லாந்தில், ஆட்கடத்தல் மற்றும் துஷ்பிரயோகம் முதலான பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்தக் குடும்பத்தினர் தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.
இந்தியக் கோடீஸ்வரர்கள்
ஹிந்துஜா குழுமம், வாகனங்கள், எண்ணெய் மற்றும் ரசாயனங்கள், வங்கி மற்றும் நிதி, தகவல் தொழில்நுட்பம், சைபர் பாதுகாப்பு, சுகாதாரம், வர்த்தகம், உள்கட்டமைப்பு திட்ட மேம்பாடு, ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு, மின்சாரம் மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பதினொரு துறைகளில் கோலோச்சும் ஒரு கூட்டு நிறுவனமாகும். இந்தக் குழுமத்தின் உரிமையாளர்களான ஹிந்துஜா சகோதரர்களுக்கு உலகம் முழுவதும் சுமார் 100 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன.
குற்றச்சாட்டு
ஹிந்துஜா குடும்பத்தினரில் ஒருவருக்குச் சொந்தமான சொத்து ஒன்று சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ளது. அங்கு வேலை செய்வதற்காக இந்தியர்கள் சிலர் அழைத்துவரப்பட்டுள்ளனர்.
அவர்கள், தங்க இடம், நல்ல சம்பளம் என ஆசை காட்டி அழைத்துவரப்பட்ட நிலையில், ஒரு கட்டிடத்தின் அடித்தளத்தில் தங்க கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், மாதம் முழுவதும் தினமும் அதிகாலை முதல் இரவு வரை ஓய்வின்றி வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், வாரத்தில் ஒரு நாள் கூட ஓய்வு இல்லாமல், ஓவர்டைம் செய்தும் அதற்கான ஊதியம் கொடுக்கப்படாமல், சில நேரங்களில் தாங்கள் வேலை செய்ததற்கான மாதச் சம்பளம் கூட ஒழுங்காக கொடுக்கப்படவில்லை என்றும் அவர்களில் சிலர், குறிப்பாக ஒரு பெண் உட்பட, புகாரளித்துள்ளார்கள்.
தாய் போல் நடத்தியதாக விளக்கம்
ஆனால், ஹிந்துஜா குடும்பத்தினர் தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். அப்படி ஒரு பணியாளரை ஒருவர் கடினமாக வேலை வாங்குவாரென்றால், அவர் முட்டாளாகத்தான் இருக்கமுடியும் என்று கூறும், வழக்கில் தொடர்புடையவரான அஜய் ஹிந்துஜா, அப்படி ஒரு பெண் வாரத்தில் ஏழு நாட்களும் 18 மணி நேரம் வேலை செய்வாரானால், அவரால் ஒழுங்காக வேலை செய்யவே முடியாதே என்கிறார்.
மேலும், அந்தப் பெண்ணை தன் பிள்ளைகளின் இரண்டாவது தாய் போல நடத்தியதாக தெரிவிக்கும் அஜய், தன் குடும்பத்துக்காக அவர் உழைத்ததற்காக அவருக்கு தான் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும், இப்போதும், தன் பிள்ளைகளுடன் அவர் தொலைபேசியில் அவ்வப்போது பேசுவதுண்டு என்றும், தீபாவளி வாழ்த்துக்கள் அனுப்புவதுண்டு என்றும் கூறியுள்ளார்.
அப்படி தன் பிள்ளைகளின் இரண்டாவது தாய் போல தாங்கள் கருதிய ஒரு பெண், தங்கள் மீது ஆட்கடத்தல் குற்றம் சாட்டியுள்ளதை அறிந்து தான் அதிர்ச்சியடைந்ததாகவும், நீதிமன்றத்தில் விசாரணையின்போது தெரிவித்தார் அஜய். ஜெனீவாவில் நேற்று முன்தினம், அதாவது, திங்கட்கிழமை துவங்கிய இந்த வழக்கு தொடர்கிறது.