1996 -ம் ஆண்டு லஞ்சமாக பறிமுதல் செய்யப்பட்ட 500 ரூபாய்., 28 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த சுவாரஸ்யம்
கடந்த 1996 -ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 500 ரூபாய் 28 ஆண்டுகளுக்குப் பின்னர் புகார்தாரருக்கு கிடைத்துள்ளது.
கோவை சம்பவம்
தமிழக மாவட்டமான கோவையை சேர்ந்தவர் கதிர்மதியோன். இவர் கடந்த 1996 -ம் ஆண்டு தனது வீட்டில் மின் இணைப்பு பெயர் மாற்றுவதற்காக மின்வாரிய அலுவலகத்தை அணுகியுள்ளார்.
அப்போது, அங்கு ரூ.500 லஞ்சமாக பணியில் இருந்த அதிகாரி கேட்டுள்ளார். ஆனால், கதிர்மதியோனுக்கு லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத போதிலும் ரூ.400 லஞ்சமாகவும், ரூ.100 கட்டணம் சேர்த்து 500 ரூபாய் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பொலிஸாரிடம் கதிர்மதியோன் புகார் அளித்தார். பின்னர் கதிர்மதியோனிடம் இருந்து 500 ரூபாயை பெற்றுக்கொண்ட லஞ்ச ஒழிப்பு பொலிஸார் அதில் ரசாயனம் தடவி அதிகாரியிடம் கொடுக்குமாறு கூறினார்.
பின்னர் அவர் அதிகாரியிடம் லஞ்சப்பணத்தை கொடுக்கும்போது பதுங்கியிருந்த பொலிஸார் அவரை கைது செய்தனர்.
இதையடுத்து, அந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு பொலிஸார் ஆதாரமாக எடுத்துச் சென்றனர். பின்னர் அந்த பணம் நீதிமன்ற கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டது.
இதையடுத்து, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த கதிர்மதியோன், லஞ்ச ஒழிப்பு பொலிஸாரால் பறிமுதல் செய்யப்படும் பணத்தை புகார்தாரரிடம் கொடுக்கவில்லை என்றால் கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்திருந்தார்.
அதாவது, பறிமுதல் செய்யப்படும் பணம் ஆவணமாக வைக்கப்படுவதால், வேறு பணத்தை கொடுக்க ஆணை உள்ளதாக பொலிஸார் கூறிய போதிலும் கதிர்மதியோனிடம் பணத்தை ஒப்படைக்கவில்லை.
இந்நிலையில், இந்த வழக்கு 28 ஆண்டுகள் கழித்து நிறைவடைந்து நீதிமன்றத்தில் இருந்த லஞ்சப் பணத்துடன் சேர்ந்து ரூ.500 கதிர்மதியோனுக்கு வந்துள்ளது.
இதுகுறித்து கதிர்மதியோன் கூறுகையில், “புகார்தாரர்கள் லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாமல் தான் லஞ்ச ஒழிப்பு பொலிஸாரை அணுகுகின்றனர். ஆனால், அவர்கள் பறிமுதல் செய்யும் பணத்தை விசாரணைக்கு பிறகு இரண்டு ஆண்டுகளிலாவது வழங்க வேண்டும்.
ஆனால், அந்த பணத்தை வழக்கு முடியும் வரை வழங்காமல் இருப்பதால் தான் லஞ்சம் தொடர்பாக புகார் அளிக்க யாரும் முன் வருவதில்லை. எனவே சிஸ்டத்தில் மாற்றம் கொண்டு வரவேண்டும்” என்றார்.