;
Athirady Tamil News

தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த இதுவே காரணம்: சஜித்திடம் சுரேஷ் எடுத்துரைப்பு

0

தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வந்ததால் சிங்கள ஐனாதிபதிகளில் எங்களுக்கு நம்பிக்கையில்லை எனவும், இதனால் தமிழ்ப் பொது வேட்பளர் ஒருவரை நிறுத்தத் தீர்மானித்துள்ளோம் என்றும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன்(Suresh Premachandran) தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ, ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியினரை நேற்று (12) சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் இவ்வாறு கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல்
சந்திப்பு தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஐக்கிய மக்கள் சக்திக்கும் எமது கட்சியினருக்கும் இடையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமான ஒரு பேச்சு நடைபெற்றிருக்கின்றது. இதன்போது கடந்த காலங்களில் தமிழ் மக்கள் எவ்வாறு ஏமாற்றப்பட்டிருக்கின்றோம் என்பதை விலாவாரியாக அவருக்கு நாங்கள் விளங்கப்படுத்தியிருக்கின்றோம்.

நாங்கள் ஏன் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டி ஏற்பட்டது என்பதையும், அது எவ்வாறு எங்கள் மேல் திணிக்கப்பட்டது என்பதையும் நாங்கள் சொல்லியிருக்கின்றோம்.

அது என்னவென்று சொன்னால், சிங்கள ஜனாதிபதிகள் மேல் எங்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றங்களும், நாங்கள் ஏமாற்றப்பட்டதும் அது மாத்திரமல்லாமல் குறைந்தபட்சம் அரசியல் சாசனத்தில் உள்ளவற்றைக் கூட நிறைவேற்றாமல் போனதும் வெறுமனே தொடர்ந்தும் நல்லிணக்கம் நல்லிணக்கம் என்று பொய்களைப் பேசிக் கொண்டிருப்பதும்தான் காரணமாகும்.

இவ்வாறான விடயங்கள் தொடர்ந்தும் இங்கு நடந்து கொண்டிருக்கின்றன என்ற விடயங்களைத் தெளிவாக அவரிடம் சொல்லியுள்ளோம்.

ஆகவேதான் இப்போது நாங்கள் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நியமிக்கின்ற முடிவுக்கு வந்திருக்கின்றோம்.

இதற்குச் சிவில் சமூகங்களும் தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஆதரவை வழங்கித் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துகின்ற செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றன என்பதையும் அவரிடம் கூறியுள்ளோம்.”என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.