குவைத் தீ விபத்து: முகத்துல துணியை கட்டி தப்பிச்சோம்.., தப்பியவரின் கண்ணீர் பேட்டி
குவைத் அடுக்குமாடி கட்டிடத்தில் நடந்த தீ விபத்தில், தமிழர்களின் நிலை என்ன ஆனது என்பது குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
குவைத் தீ விபத்து
குவைத் நாட்டின் தெற்கு அகமதி மாகாணத்தில் மங்கஃப் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஜூன் 12 -ம் திகதி அதிகாலையில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 40 இந்தியர்கள் உட்பட 49 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குவைத் நாட்டவருக்கு சேர்ந்த இந்த குடியிருப்பில், வெளிநாட்டை சேர்ந்தவர்கள் அதிகம் தங்கியுள்ளனர். மொத்தம் இதில் 6 மாடிகள் உள்ளன.
எகிப்து நாட்டு காவலாளி தங்கியிருந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தது தான் விபத்துக்கான காரணம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
கட்டிடத்தின் கீழ்தளத்தில் காவலாளி தங்கிய நிலையில், மற்ற பகுதிகளுக்கும் தீ வேகமாக பரவியுள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 195 பேர் தங்கி இருந்துள்ளனர். அதில் 150 – மேற்பட்டோர் இந்தியர்கள் என்று கூறப்படுகிறது.
விருதுநகர் மணிகண்டன்
இந்நிலையில், குவைத் தீ விபத்து நடந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு பக்கத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மணிகண்டனர் என்பவர் வசித்து வருகிறார். இவர் விருதுநகரை சேர்ந்தவர் ஆவார். இவர், குவைத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் தனியார் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளிக்கையில், “குவைத்தில் பகலில் வெப்பம் அதிகமாக இருப்பதால் பலரும் இரவு பணிக்கு தான் செல்வார்கள்.
இந்நிலையில், நேற்று காலை சிலர் சமைத்திருக்கிறார்கள். இந்த கட்டிடத்தின் அடித்தளத்திலேயே சமையலறை உள்ளது. இங்கிருந்து தீ எல்லா இடங்களுக்கும் பரவியிருக்கிறது.
அதிகாலை நேரம் தீ விபத்து ஏற்பட்டதால் சிலர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். சிலர் தப்பிக்க முயன்று கீழே குதித்து உயிரிழந்தனர்.
இங்குள்ள அறைகளில் தங்கியிருந்தவர்கள் பெரும்பாலும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் தமிழர்களும் தங்கியிருந்தனர். ஆனால், அவர்களுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை” என்றார்.
இந்த தீ விபத்து குறித்து மற்றொரு நபர் கூறுகையில், “விபத்து நடந்த கட்டிடத்துக்கு பின்பக்கம்தான் நாங்கள் தங்கியிருந்தோம். இது மொத்தம் 160 ஊழியர்கள் தங்கக்கூடிய கட்டடம் ஆகும்.
41 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என்று சொல்கிறார்கள். ஆனால், எங்களுக்கு அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை.
புகை சூழ்ந்திருந்ததை பார்த்ததுமே உடனடியாக முகத்தில் துணியை கட்டிக்கொண்டு வெளியேறிவிட்டோம்.. பலருக்கு மூச்சுத்திணறல் வந்துவிட்டதால் தப்ப முடியவில்லை” என்றார்.