நாசா நேரலையில் ஒலித்த பயத்தை ஏற்படுத்திய செய்தி: அதிர்ச்சியில் ஆழ்ந்த மக்கள்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் யாருக்கோ ஆபத்து என்பதுபோல் ஒலிக்கும் ஒரு செய்தி நாசா நேரலையில் ஒலிபரப்பாக, அதைக் கேட்ட மக்கள் அதிர்ச்சியில் உறைந்தார்கள்.
நாசா நேரலையில் ஒலித்த பயத்தை ஏற்படுத்திய செய்தி
நேற்று, புதன்கிழமை மாலை நாசா 6:28 மணியளவில் (6:28 p.m. ET), நாசா வழக்கமான ஒலிபரப்பு திடீரென நிறுத்தப்பட, சர்வதேச விண்வெளி நிலையத்தில் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள ஒருவருக்கு மருத்துவர் ஒருவர் சிகிச்சை அளிப்பது குறித்து அறிவுறுத்தும் ஒடியோ ஒன்று வெளியாக, அதை சமூக ஊடகம் வாயிலாக கேட்டுக்கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்கள்.
’அவரது நாடித்துடிப்பை மீண்டும் பரிசோதியுங்கள்’ என்று ஒரு பெண் மருத்துவர் கூற, தொடர்ந்து அவர் கூறிய ஆலோசனைகளும், கடைசியாக, பாதிக்கப்பட்டவரை விண்வெளி நிலையத்திலிருந்து திரும்ப பூமிக்குக் கொண்டுவரவேண்டும், அவரது இரத்தத்தில் ஆக்சிஜன் அளவை அதிகரிப்பதற்காக ஸ்பெயினிலுள்ள ஒரு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவேண்டும் என்றும் அந்த மருத்துவர் கூற, என்ன நடக்கிறது என்று தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள் மக்கள்.
விளக்கமளித்த நாசா
பின்னர், பரபரப்பை ஏற்படுத்திய அந்த ஒடியோ குறித்து நாசா எக்ஸில் விளக்கமளித்தது.
அந்த ஒடியோ வெளியானபோது சர்வதேச விண்வெளி நிலையத்தில் அனைவரும் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்ததாகவும், அங்கு எந்த அவசர நிலையும் உருவாகவில்லை என்றும் கூறியுள்ள நாசா, அந்த ஒடியோ அசாதாரண சூழலை எப்படிக் கையாள்வது என்பதற்காக பயிற்சி பெறுவோருக்காக ஓலிபரப்பப்பட்ட ஒடியோ என்றும் தெரிவித்தது.
There is no emergency situation going on aboard the International Space Station. At approximately 5:28 p.m. CDT, audio was aired on the NASA livestream from a simulation audio channel on the ground indicating a crew member was experiencing effects related to decompression…
— International Space Station (@Space_Station) June 13, 2024
அந்த செய்திக்கு பதிலளித்த ஒருவர், எங்களில் பலருக்கு கொஞ்ச நேரம் பயத்தை ஏற்படுத்திவிட்டீர்கள் என்று கூற, மற்றொருவரோ, சர்வதேச விண்வெளி நிலையத்தில் எல்லோரும் பத்திரமாக., பாதுகாப்பாக, நலமாக இருப்பதை அறிந்ததில் பெரிய நிம்மதி என்று கூறியுள்ளார்.
விடயம் என்னவென்றால், இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உட்பட இரண்டு விண்வெளி வீரர்கள் தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கிறார்கள். அத்துடன், அவர்கள் இன்று 8.00 மணியளவில் (8 a.m. EDT) விண்வெளியில் நடைபயில இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில், இப்படி ஒரு பதறவைக்கும் ஒடியோ வெளியாக மக்கள் குழப்பமடைந்துவிட்டார்கள்!