;
Athirady Tamil News

பொன்னான வாய்ப்பு கிடைத்தது – எம்மை தவிர ஏனைய அனைவரும் அதை நிராகரித்திருந்தனர் – இதுவே இன்றைய சாபக்கேடான நிலைக்கு காரணம் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

0

தமிழ் மக்களின் அரசியல் உரிமை பிரச்சினைக்கான தீர்வுக்கு 13 ஆவது திருத்தம் உள்ளிட்ட பொன்னான வாய்ப்புகள் பல கிடைத்திருந்தது. அவ்வாறான சிறந்த சந்தர்ப்பங்களை எல்லாம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியாகிய எம்மை தவிர தமிழ் தரப்பிலிருந்த ஏனைய அனைவரும் நிராகரித்திருந்தனர் என சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இதுவே தமிழ் மக்களின் இன்றைய சாபக்கேடான நிலைக்கு முக்கிய காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்திற்கு இன்றையதினம் விஜயம் செய்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாவட்டத்தில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் அவற்றுக்கான தீர்வுகள் குறித்து துறைசார் அதிகாரிகளுடன் கலந்துரையாடலொன்றை முன்னெடுத்திருந்தார்.

இதன்பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

தமிழ் மக்கள், தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துபவன் என் வகையில் வடக்கு கிழக்கை மையப்படுத்தியதாகவே எனது அன்றையகால உரிமைப்போராட்டமும் இருந்தது இன்றைய நாடாளுமன்ற அரசியல் செயற்பாடுகளும் இருந்துவருகின்றது.

அன்று தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதை மையமாக வைத்தே உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தோம். அந்த போராட்டம் 1987 களில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் தேவையற்றதாக மாறிவிட்டடது. இதேநேரம் சிலரது தவறான வழிநடத்தல்களால் ஆயுதப் போராட்டமும் திசைமாறி சென்றுவிட்டது.

இந்த சூழலை கருத்திற்கொண்டே நான் 13 ஆவது திருத்த சட்டத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற மாகாண சபை முறைமையே தமிழர் பிரச்சினைக்கான தீர்வுகளை எட்டுவதற்கான ஆரம்ப புள்ளியாகும். இதை ஏற்று அதன்வழி சென்று எமது இலக்கை எட்டலாம் என அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்தும் வந்திருக்கின்றேன். அனால் அவர்கள் எனது கருத்தை அன்று ஏற்றிருக்கவில்லை.

13 ஆவது திருத்தம் என்ற வடிவில் பொன்னான வாய்ப்பை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியாகிய எம்மை தவிர தமிழ் தரப்பிலிருந்த ஏனைய அனைவரும் நிராகரித்திருந்தனர் ஆனால் நாம் தான் அதை தொடர்ந்தும் வலியுறுத்திவந்து கொண்டிருக்கின்றோம். அதுவே தற்போதைய நிலையில் நடைமுறை சாத்தியமாகவும் உள்ளது.

இந்நிலையில் சில நாள்களுக்கு முன்னராக தென்னிலைங்கையின் குறிப்பாக வரவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களான ரணில் விக்ரமசிங்க. சஜித் பிரேமதாஸ மற்றும் அனுரகுமார திஸநாயக்கா ஆகியோர் வருகைதந்து சென்றுள்ளனர். அவர்களிம் இன்று அனைத்தும் கைமீறிச்சென்றுவிட்ட நிலையில் 13 ஆ, அதில் பாதியா அல்லது கால்வாசியா என பேசிக்கொண்டிருக்கின்றனர்

ஆனால் அது எமது கைகளில் ஏற்கனவே இருக்கின்றது. அதை கைநழுவ விட்டுவிட்டு மருந்துக்குத்தான் வலி என்றிருந்ததே இன்று இந்த சாபக்கேடான நிலைக்கு காரணமாகும்.
இதேநேரம் இன்றாவது நாம் கூறிய வழிமுறைக்கு ஏனைய தரப்பினரும் வந்துள்ளனர் என கருதினாலும் அதிலும் அவர்களிடம் உண்மை இருக்காது என்றே எண்ணத் தோன்றுகின்றது.

இதேவேளை தமிழ் தலைவர்கள் அல்லது பிரதிநிதிகள் என்று கூறும் தர்ப்பினர் பிரச்சினையை தீரா பிரச்சினையாக வைத்திருக்கவேண்டும் என நினைத்தே ஒவ்வொரு நகர்வுகளையும் முன்னெடுக்கின்றனர்.

யாராக இருந்தாலும் அதாவது இலங்கை அரசாகவோ அற்றி இந்திய அரசாகவோ இருந்தாலும் அவர்கள் தத்தமது நலன்களிலிருந்தே எந்தவொரு பிரச்சினையையும் அணுகுவார்கள். அதுதான் நியதியும் கூட. அதனால் நாம் அவர்களை நம்பிக்கொண்டிராது எமக்கு கிடைக்கின்ற வாய்ப்புகளை “காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்” என்பதுபோல சரியாக பயன்படுத்திக் கொள்வதே முக்கியமானதாகும்.

இதேநேரம் தற்போது பேசப்படும் தமிழ் போது வேட்பாளர் விடயம் என்பதும் பொய்யான ஏற்பாடுதான். என்னிலிருந்த அரசியல் அச்சம் காரணமாகவே அன்று பிரபாகரன் இந்த உதிரிகளை எல்லாம் ஒன்றிணைத்து ஒரு மூட்டையாக கூட்டமைப்பு என்ற சாக்குக்கள் ஒன்றாக போட்டு கட்டிவிட்டிருந்தார். அது இன்று கட்டவிழ்ந்து திசைக்கொன்றாக உருண்டோடிக் கொண்டிருக்கின்றது.

ஆனால் தற்போது தேர்தல் வரவுள்ளதால் ஐக்கியம் என்ற போர்வைக்குள் தம்மை போர்த்திக்கொள்ள கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுவருகின்றனர். அதற்கான ஏற்பாடே இந்த பொது வேட்பாளர் பேச்சும் இருக்கின்றது.

இதேநேரம் அதலபாதாளத்தில் வீழ்ந்திருந்த நாட்டை பொறுப்பெற்று அதை படிப்படியாக முன்னேற்றம் காணச் செய்துகொண்டிருக்கும் ரணில் விக்ரமசிங்க முன்னெடுக்கும் நடவடிக்கைகளும் செயற்பாடுகளும் சரியானதாகவே இருக்கின்றது என நான் எண்ணுகின்றேன்.

இதை நான் பல சந்தர்ப்பங்களிலும் பொது வெளியில் பகிரங்கமாக கூறிவருகின்றேன். அதனால் இன்னும் சில காலங்களுக்கு ரணில் விக்ரமசிங்கவுக்கு அதை முன்னெடுத்துச் செல்ல சந்தர்ப்பம் கொடுப்பது சிறந்தது என்றே எண்ணுகின்றேன். அதுவே நாட்டுக்கு மட்டுமல்லாது தமிழ் மக்களுக்கும் நன்மையாக அமையும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. {33}

You might also like

Leave A Reply

Your email address will not be published.