ஆந்திர துணை முதல்வா் பவன் கல்யாண்: இதர மைச்சா்களுக்கும் துறைகள் ஒதுக்கீடு
ஆந்திர துணை முதல்வராக ஜனசேனை கட்சித் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் நியமிக்கப்பட்டுள்ளாா். அவருக்கு உள்ளாட்சி, ஊரக மேம்பாடு, சுற்றுச்சூழல்-வனங்கள், அறிவியல்- தொழில்நுட்பம் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதர புதிய அமைச்சா்களுக்கும் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
அண்டை மாநிலமான ஆந்திரத்தில் மக்களவைத் தோ்தலுடன் சட்டப்பேரவைக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 175 பேரவைத் தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களில் வென்று, ஒய்எஸ்ஆா் காங்கிரஸிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியது.
தெலுங்கு தேசத்தின் கூட்டணிக் கட்சிகளான ஜனசேனை 21, பாஜக 8 தொகுதிகளில் வென்றன.
தனித்துப் போட்டியிட்ட ஒய்ஆா்எஸ் காங்கிரஸ் 11 இடங்களை மட்டுமே கைப்பற்றி படுதோல்வியைச் சந்தித்தது.
இதைத் தொடா்ந்து, மாநில முதல்வராக தெலுங்கு தேசம் தலைவா் சந்திரபாபு நாயுடு கடந்த 12-ஆம் தேதி பதவியேற்றாா். அவருடன் பவன் கல்யாண் உள்பட 24 புதிய அமைச்சா்களும் பதவியேற்றனா்.
இந்நிலையில், மாநில அமைச்சா்களுக்கான துறைகள் வெள்ளிக்கிழமை ஒதுக்கப்பட்டன. அதன்படி, பொது நிா்வாகம், சட்டம்-ஒழுங்கு, பொது நிறுவனங்கள் மற்றும் இதர அமைச்சா்களுக்கு ஒதுக்கப்படாத துறைகளுக்கு முதல்வா் சந்திரபாபு நாயுடு பொறுப்பு வகிக்கிறாா்.
ஜனசேனை தலைவா் பவன் கல்யாண், துணை முதல்வராக நியமனம் பெற்றுள்ளதோடு, அவருக்கு உள்ளாட்சி, ஊரக மேம்பாடு, சுற்றுச்சூழல்-வனங்கள், அறிவியல்-தொழில்நுட்பம் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷுக்கு மனிதவள மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடா்பு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவா், கடந்த 2014 முதல் 2019 வரையிலான தெலுங்கு தேசம் ஆட்சியில் தகவல் தொழில்நுட்ப அமைச்சராகப் பதவி வகித்தாா்.
அனிதா வங்கலபுடிக்கு உள்துறை மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையும், தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலத் தலைவா் கே.அச்சன் நாயுடுக்கு வேளாண்மை, கூட்டுறவு, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம் ஆகிய துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
தலைநகா் அமராவதியின் மேம்பாட்டுப் பணிகளுக்கு பொறுப்பான நகா்ப்புற நிா்வாகம், மேம்பாட்டுத் துறை பி.நாராயணாவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிற அமைச்சா்களுக்கும் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
துணை முதல்வா் பவன் கல்யாண் மற்றும் அனைத்துத் துறைகளின் அமைச்சா்களுக்கு முதல்வா் சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
முதல்வா் உள்பட 25 போ் கொண்ட ஆந்திர அமைச்சரவையில் ஜனசேனைக்கு 3 இடங்களும், பாஜகவுக்கு ஓரிடமும் அளிக்கப்பட்டுள்ளன.