யாழ்.பல்கலை – வேலூர் துணைவேந்தர்கள் சந்திப்பு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு நேற்று வெள்ளிக்கிழமை வருகைதந்த இந்தியாவின் வேலூர் தொழில்நுட்பக் கல்லூரி துணைவேந்தர் ஜி.விஷ்வாகாந்த் தலைமையிலான குழுவினர், யாழ்ப்பாணப் பல்கலைக் கழக துணைவேந்தர் மற்றும் பேராசிரியர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
கல்வி ஆய்வு நடவடிக்கைகள் தொடர்பாக சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டதுடன் வேலூர் தொழில்நுட்பக் கல்லூரியில் இலங்கை மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களையும், குறுங்கால புலமைப்பரிசில்களையும் வழங்குவது தொடர்பிலும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும் இரு பல்கலைக்கழகங்களும் இணைந்து விரைவில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திடவும் தீர்மானித்தன.
இந்தச் சந்திப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் ஸ்ரீசற்குணராசா, கலைப்பீடாதிபதி ரகுராம்,விஞ்ஞான பீடாதிபதி ரவிராஜன், வர்த்தக முகாமைத்துவ கற்கைகள் பீடாதிபதி கெங்காதரன், பட்டப்பின் படிப்பு கற்கைகள் பீடாதிபதி வேல்நம்பி, சிரேஷ்ட பேராசிரியர் ஜி.மிகுந்தன், விவசாய மற்றும் தொழில்நுடப பொறியியல் பீடங்களின் பீடாதிபதிகள், துறைத்தலைவர்கள் ஆகியோருடன் வேலூர் தொழில்நுட்பக் கல்லூரி துணைவேந்தர் ஜி.விஷ்வாகாந்த்,சர்வதேச கற்கைகளுக்கான பணிப்பாளர் பேராசிரியர் ஸ்ரீனிவாசன், இலங்கை இணைப்பாளர் முயீன், துணைவேந்தரின் செயலர் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.