ஊடகவியலாளர்கள் மீது வன்முறைத் தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டுவருவதை ஏற்கமுடியாது – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
நாட்டில் இயல்பான சூழ்நிலை காணப்படும் இந்த காலகட்டத்தில் ஊடகவியலாளர்கள் மீது வன்முறைத் தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டுவருவதை ஏற்கமுடியாது என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அத்தகைய செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
யாழ் பிராந்திய ஊடகவியலாளரான பிரதீபன் வீட்டின் மீது அண்மையில் நடத்தப்பட்ட வன்முறை தாக்குதல் தொடர்பில் கருத்து கூறும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில் –
ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாது. கடந்த காலங்களில் நாட்டில் எத்தனை தாக்குதல்கள் அச்சுறுத்தல்கள் கொலைகள் எல்லாம் நடந்திருந்தது என உங்களுக்கு தெரியும்.
அன்று அதை செய்தவர்கள் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கிற மாதிரியான போர்வையிலேயே அதை முன்னெடுத்திருந்தனர்.
குறிப்பாக ஊடகவியலாளர் மீது தங்களுடைய வஞ்சகத்தை தீர்த்துக் கொள்வது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அதன் பழியை ஈ.பி.டி.பி மீது இலகுவாக போட்டு தாம் தப்பித்துக்கொள்வதாக இருந்தது. இதுதான் கடந்த காலங்களில் நடந்தது
அதேபோன்றுதான் இன்றைக்கும் இந்த சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. ஆனால் துரதிஸ்ரவசமாகவோ அதிர்ஷ்டவசமாகவோ ஈ.பி.டிபியின் பெயர் இன்று அத்தகைய செயற்பாடுகளில் பயன்படுத்துவது இல்லாது போய்விட்டது.
அது உணர்வினுடைய வெளிப்பாடாக இருக்கலாம் அல்லது அந்த வன்முறைக்கு தலைமை தாங்கியவர்கள் இன்று அடியோடு இல்லாமையாகவும் இருக்கலாம்.
கடந்த காலத்தில் வன்முறைக்கு தலைமை தாங்கியவர்கள் ஈ.பி.டிபினுடைய மாற்றிக் கொள்கை அல்லது மாற்று வேலைதிட்டத்தை விரும்பாததால் அல்லது தாங்கள் செய்வது அம்பலப்பட்டு போகும் என்பதை விரும்பாமல் ஈ.பி.டி.பியை ஏதோ ஒரு வகையில அளிக்க முற்பட்டார்கள். குறிப்பாக உயிர் அச்சுறுத்தல் உயிராபத்துகளையும் ஏற்படுத்தியது மற்றது ஈ.பி.டிபியுடைய நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த முயற்சிகளை செய்தார்கள். அதைத்தான் நான் இந்த சந்தர்ப்பத்தில் சகோதரர் பிரதீபன் விடயத்திலும் கூறவிரும்புகின்றேன்.
அந்தவகையில் எல்லாரும் விழிப்பாக இருந்து.உண்மை வெளிவருமானால் இவ்வாறான சம்பவங்களை நாங்கள் இல்லாமல்செய்யலாம் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடததக்கது.