13இனை அமுல்படுத்தவே இந்திய இராணுவம் இலங்கை வந்தது
தங்களை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என சொல்பவர்களால் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்களின் அழிவுகளை ஏன் தடுக்க முடியவில்லை ? என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பி இருந்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
ஈபிடிபி வன்முறைகளை விரும்புபவர்கள் அல்ல. நாங்கள் வன்முறைகளை கைவிட்டு , ஜனநாயக நீரோடையில் கலந்து விட்டோம்.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தவே இலங்கைக்கு இந்திய இராணுவத்தினரை அனுப்பி வைத்ததுடன் , தெற்கில் இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகளையும் முன்னெடுத்தனர்.
அதனை குழப்பியடித்து , தும்பு தடியால் கூட அதனை தொடமாட்டோம் என கூறி குழப்பங்களை உண்டு பண்ணினார்கள். அதன் பின் என்ன நடந்தது என உங்களுக்கு தெரியும்.
அண்மையில் நடைபெற்ற பொன். சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வில். பழைய நண்பர் சுரேஷ் பிரேமசந்திரன் உடன் கதைக்க சந்தர்ப்பம் கிடைத்தது, அதன் போது, இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் 13 இனை அமுல் படுத்தி இருந்தால் , இன்றைக்கு தமிழ் மக்கள் எங்கேயோ இருந்திருப்பார்கள் என கூறினேன். அவரும் அதனை ஏற்றுக்கொண்டதை போல் இருந்தது.
எமது பிரச்சனைகளை நாங்களே தீர்க்க வேண்டும். சர்வதேச நாடுகள் தங்கள் நலன் சார்ந்தே சிந்திக்குமே தவிர எமது பிரச்சனைகளை தீர்க்க முன் வராது.
இலங்கை இந்திய ஒப்பந்தம் நல்லதொரு சந்தர்ப்பம் அதனை நாங்கள் தவற விட்டு விட்டோம். மக்கள் நலன் சார்ந்து யாரும் சிந்திக்காததால் தான் அதனை தவறவிட்டோம்.
ஜனாதிபதி தேர்தலுக்காக தெற்கில் இருந்து பலரும் வடக்கிற்கு வந்து தமிழ் பிரதிநிதிகள் என சிலரை சந்திக்கின்றார்கள். அவர்களிடம் இவர்களும் அரைவாசியை தா முக்கால் வாசியை தா என கேட்கிறார்கள்.
பின்னர் அவர்களுக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்க்களிடம் கோருகிறார்கள். ஆட்சி அமைக்கப்பட்டதும் , ஆட்சியாளர்களுடன் கூடி குழாவிய பின்னர், இறுதியாக அடுத்த தேர்தல் நெருக்கும் நேரம் அவர்கள் ஏமாற்றி விட்டார்கள் என தமிழ் மக்களிடம் கூறுவார்கள்.
நான் எப்போதும் , அதனை பெற்று தருவேன் இதனை பெற்று தருவேன் என கூறியதில்லை. மக்கள் என்னிடம் எதனை கேட்கிறார்களோ , அதனை பெற்றுக்கொடுக்க முடிந்தால் அதனை நிச்சயம் பெற்று கொடுத்துள்ளேன்.
நாம் எமது கொள்கையை மாத்திரமே மக்களிடம் கூறுகிறோம். அவர்களை இவர்களை நம்புங்கள் என கூறவில்லை. எம்மால் முன் வைக்கப்படும் கொள்கையை ஏற்று எம்முடன் மக்கள் பயணிக்கின்றார்கள். அவர்களுக்கு எம்மால் முடிந்ததை செய்வோம் என தெரிவித்தார்.