;
Athirady Tamil News

ரணில் வென்றால் தான் தமிழர்களுக்கு நல்லது – டக்ளஸ் தேவானந்தா

0

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்காவை வெற்றியடையச் செய்வதே தமிழ் மக்களுக்கு நல்லது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட கடலட்டைப் பண்ணையாளர்களுடன் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்தகாலத்தில் தவறான வழிநடத்தல்களும் உணர்ச்சி பேச்சுக்களும் பெற்றுத்தந்தது அழிவுகளையும் வடுக்களையும் மட்டும்தான். இனி ஒருபோதும் அந்த நிலைக்கு எமது இனம் சென்றுவிடக்கூடாது.

1987 இல் தாம்பாளத்தை வைத்து தரப்பட்ட ‘13 ஐ” கைநழுவ விட்டுவிட்டு இன்று வெட்கம்கெட்டதனமாக அதை முழுமையாக தருவீர்களா பாதியாக தருவீர்களா என தென்னிலங்கை அரசியல் தலைவர்களிடம் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.

தமிழ் போது வேட்பாளர் விடயம் என்பதும் தேவையற்ற ஒன்றாகத்தான் நான் கருதுகின்றேன். ஆனால் தற்போது தேர்தல் வரவுள்ளதால் ஐக்கியம் என்ற போர்வைக்குள் தம்மை போர்த்திக்கொள்ள கடும் பிரயத்தனங்களை தேசியம் பேசும் தமிழ் தரப்பினர் மேற்கொண்டுவருகின்றனர்.

அதற்கான ஏற்பாடே இந்த பொது வேட்பாளர் பேச்சும் இருக்கின்றது.

பாதாளத்தில் வீழ்ந்திருந்த நாட்டை பொறுப்பெற்று அதை படிப்படியாக முன்னேற்றம் காணச் செய்துகொண்டிருக்கும் ரணில் விக்ரமசிங்க முன்னெடுக்கும் நடவடிக்கைகளும் செயற்பாடுகளும் சரியானதாகவே இருக்கின்றது என நான் எண்ணுகின்றேன்.

அதனால் வரவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அவரை வெற்றியடையச் செய்வதே தமிழ் மக்களுக்கு நல்லதென் நான் நினைக்கின்றேன்..

இந்நிலையில் வரவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களான ரணில் விக்ரமசிங்க. சஜித் பிரேமதாஸ மற்றும் அனுரகுமார திஸநாயக்கா ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்து சென்றுள்ளனர்.

இன்று அனைத்தும் கைமீறிச்சென்றுவிட்ட நிலையில் அவர்களிடம் 13 ஆ, அதில் பாதியா அல்லது கால்வாசியா என பேசிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அது எமது கைகளில் ஏற்கனவே இருக்கின்றது

இதேவேளை எதனையும் தேசிய நல்லிணக்கம் மற்றும் சலசலப்பற்ற பொறிமுறைகளூடாக சாதிக்கலாம் என்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது.

அவ்வாறு நாம் பலவற்றை சாதித்தும் காட்டியிரக்கின்றோம். எனவே அடுத்துவரும் காலங்களில் எமக்கு மக்கள் பலம் மேலும் அதிகளவாக கிடைக்கும் பட்சத்தில் இன்னும் அதிகளவான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை எட்டிவிட முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது என மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.