சிங்கப்பூரில் எண்ணெய்க் கசிவு : காரணத்தை வெளியிட்ட கூட்டறிக்கை
சிங்கப்பூர் (Singapore) – பாசிர் பாஞ்சாங் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட கப்பலில் ஏற்பட்ட எண்ணெய் கசிவிற்கான காரணம் வெளியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எண்ணெய்க் கசிவைத் துப்புரவு செய்யும் பணிகளை மேற்கொண்டுள்ள சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையகம் (Maritime and Port Authority), தேசிய சுற்றுப்புற வாரியம், தேசிய பூங்காக் கழகம், செந்தோசா மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து அறிக்கை ஒன்றை வெளியட்டுள்ளன.
நேற்று முன் தினம் (16) வெளியிட்ட குறித்த கூட்டறிக்கையிலேயே எண்ணெய் கசிவிற்கான காரணத்தைக் குறிப்பிட்டுள்ளன.
எண்ணெய்க் கசிவு
நெதர்லாந்து நாட்டின் படகு, ஜூன் 14ஆம் திகதி சிங்கப்பூர்க் கப்பலின் மீது மோதியதில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை கப்பல் பொறி மற்றும் திசை திருப்பியின் கட்டுப்பாட்டை திடீரென இழந்ததே இகற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எண்ணெய்க் கசிவைத் சிதறடிக்கும் திரவத்தைத் தெளிக்க சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையகம் அதன் சுற்றுக்காவல் படகை அனுப்பியுள்ளதாகவும் மேலும் 250க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன், கசிவின் பாதிப்பைக் குறைப்பதற்கு நீர் மேல் மிதக்கும் எண்ணெய்யை அகற்றும் கருவியும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணைகள்
இதனிப்படையில், எம்பிஏ (MPA) இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதுடன் விசாரணையில் கப்பல் தலைவரும் குழுவினரும் உதவிவருவதாகக் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பொதுமக்கள் செந்தோசாவின் (Sentosa) கடற்கரைகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டாலும் கடல்சார் நடவடிக்கைகளும் நீச்சல் அடித்தலும் தஞ்சோங், பலவான், சிலோசோ கடற்கரைகளில் அனுமதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.