;
Athirady Tamil News

துணை ஜனாதிபதி இறுதி ஊர்வலத்தில் புகுந்த வாகனம்..கர்ப்பிணி உட்பட 4 பேர் உயிரிழந்த பரிதாபம்

0

மலாவி துணை ஜனாதிபதியின் இறுதி ஊர்வலத்தில் வாகனம் புகுந்ததில் 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விமான விபத்தில் பலி
மலாவி நாட்டின் துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமா விமான விபத்தில் பலியானார். இதனையடுத்து அவரின் சொந்த ஊரான Nsipe நோக்கி இறுதி ஊர்வலம் நடந்தது.

அப்போது திடீரென வாகனம் ஒன்று கூட்டத்தில் புகுந்தது. இதில் பாதசாரிகளில் 2 பெண்கள், 2 ஆண்கள் என 4 பேர் படுகாயமடைந்தனர்.

அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். துரதிர்ஷ்டவசமாக நால்வரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஊர்வலத்தின்போது கல்வீச்சு
மேலும் பலியானவர்களில் ஒருவர் கர்ப்பிணி பெண் என தெரிய வந்துள்ளது. அத்துடன் 12 பேர் காயமடைந்தனர்.

இச்சம்பவம் குறித்து யு.டி.எம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பெலிக்ஸ் கூறுகையில்,

‘ஊர்வலத்தின்போது ஒரு சில இடங்களில் திரண்டிருந்த மக்கள், துணை ஜனாதிபதியின் உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டியை பார்த்து அஞ்சலி செலுத்துவதற்காக, ஊர்வலத்தை நிறுத்தும்படி கூறியதால் பதற்றம் உருவானது. ஊர்வலத்தின்போது கல்வீச்சு சம்பவங்களும் நடந்தன. கட்சியினர் அமைதி காக்க வேண்டும்’ என தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையில் கட்டுக்கடங்காத கூட்டத்தில் இருந்து வாகனம் விலகி செல்ல முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.