;
Athirady Tamil News

ஜேர்மனியில் வெளிநாட்டு சிறுமிகளை சூழ்ந்துகொண்ட 20 இளைஞர்கள்: தாக்குதலுக்கு அமைச்சர்கள் கண்டனம்

0

ஜேர்மனியில், பதின்ம வயதினர், இளைஞர்கள் என சுமார் 20 பேர் சேர்ந்து சிறுமிகள் இருவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தன் மகள்கள் மீதான தாக்குதலைத் தடுக்கமுயன்ற தந்தையும் காயமடைந்துள்ளார். இந்த சம்பவத்துக்கு ஜேர்மன் அமைச்சர்கள் முதல் பலரும் கண்டனம் தெரிவித்துவருகிறார்கள்.

சிறுமிகள் இருவர் மீது தாக்குதல்

ஜேர்மனியின் Mecklenburg-Western Pomerania மாகாணத்திலுள்ள Grevesmühlen என்னும் நகரில், கானா நாட்டவர்களான ஒரு 8 வயது சிறுமியையும், அவளது சகோதரியான 10 வயது சிறுமியையும் சூழ்ந்துகொண்ட பதின்ம வயதினர், இளைஞர்கள் என சுமார் 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவர்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளது.

அந்த 8 வயது சிறுமியின் முகத்தில் அவர்கள் மிதிக்க, அவளை அவளது பெற்றோர் காப்பாற்ற முயன்றிருக்கிறார்கள். அதில் அந்த சிறுமியின் தந்தைக்கும் அடிவிழுந்துள்ளது.

இனவெறுப்பு தாக்குதல்
தகவலறிந்து பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்த பிறகும், தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர், இனரீதியாக அந்த பிள்ளைகளை விமர்சித்துள்ளார். பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

இந்நிலையில், இந்த தாக்குதலை அமைச்சர்கள் உட்பட பலரும் கண்டித்துள்ளார்கள். தாக்கப்பட்ட குடும்பத்துக்கு ஆதரவாக தான் நிற்பதாக தெரிவித்துள்ள ஜேர்மன் உள்துறை அமைச்சரான Nancy Faeser, குழந்தைகளை இனரீதியாக விமர்சிப்பதும், மிருகத்தனமாக தாக்குவதும் ஆழமான வெறுப்பு மற்றும் கற்பனை செய்யமுடியாத அளவிலான வெறுப்பு மற்றும் மனிதாபிமானமற்ற செயல்களுக்கான அடையாளங்கள் என்று கூறியுள்ளார்.

இந்த தாக்குதல் குறித்து அறிந்த தான் கடும் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ள நகர மேயரான Lars Prahler, அடிப்படையற்ற வெறுப்பையும் மனிதத்தன்மையின்மையையும் காட்டும் இந்த செயல்களை மன்னிக்க இயலாது என்று கூறியுள்ளார்.

மாகாண பிரீமியரான Manuela Schwesig, இந்த தாக்குதலைக் கண்டித்துள்ளதுடன், அந்த சிறுமிக்கு 8 வயதுதான் ஆகிறது, என் மகளுக்கும் அந்த வயதுதான், சமுதாயத்தை நஞ்சாக்கும் வெறுப்பையும் இனவெறுப்பு விமர்சனங்களையும், நம் பிள்ளைகளை அச்சுறுத்தும் வன்முறையையும் அனுமதிக்கக்கூடாது என்றும் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.