நினைத்த வேட்பாளர் வெற்றி பெற்றதற்கு.., ஒட்டு மொத்த கிராமமே திருப்பதிக்கு பாதயாத்திரை!
நினைத்த வேட்பாளர் வெற்றி பெற்றதால் ஊரையே காலி செய்து கிராம மக்கள் அனைவரும் திருப்பதிக்கு பாதயாத்திரை சென்றுள்ளனர்.
கிராமமே பாத யாத்திரை
நடந்து முடிந்த ஆந்திர பிரதேசம் சட்டமன்ற தேர்தலில் சந்திரகிரி தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் புலி வர்த்தி வெங்கடமணி பிரசாத் என்கிற நானி என்பவர் வேட்பாளராக களமிறங்கினார்.
இவர் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றும், அவர் வெற்றி பெற்றால் நடந்து வந்து நேர்த்தி கடன் செலுத்துவதாக தாமல செருவு பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஊட்ல வங்க கிராம மக்கள் வேண்டிக் கொண்டனர்.
பின்னர், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் செவி ரெட்டி பாஸ்கர் ரெட்டியை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நானி வெற்றி பெற்றார்.
இதனால், தங்களுடைய பிரார்த்தனை நிறைவேறியதால் கிராம மக்கள் அனைவரும் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பாதயாத்திரை செல்ல முடிவு செய்தனர்.
பின்னர், நேற்று ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஒட்டு மொத்தமாக ஊரை காலி செய்து நடை பயணமாக திருப்பதிக்கு சென்றனர்.
அப்போது, எம்.எல்.ஏ. நானியின் மனைவி புலிவத்தி சுதா ரெட்டி தாமல செருவில் கிராம மக்களுக்கு அன்னதானம் வழங்கி வழியனுப்பி வைத்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பேசப்பட்டு வருகிறது.