தென்னிலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பு… சூடுபிடிக்கவுள்ள கட்சி தாவல்கள்!
இலங்கையின் தெற்கு அரசியலில் மிக விரைவில் ஏட்டிக்குப் போட்டியாகக் கட்சி தாவல்கள் சூடுபிடிக்கும் என்று சிங்கள வார இதழ்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இதற்கான பேச்சுகள் இடம்பெற்று வருவதாகவும், கட்சி தாவும் காலப் பகுதி பற்றி ஆராயப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.
இந்நிலையில், ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே தாவல்கள் பெருமளவில் இடம்பெறக் கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அரசாங்கத்துடன் இணையவுள்ளனர்.
அதேபோல் ஆளுங்கட்சி பக்கம் உள்ள 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை ஐக்கிய மக்கள் சக்தியுடன் சங்கமிக்கவுள்ளனர் என்றும் தெரியவருகின்றது.
மேலும், சர்வஜன அதிகாரம் பக்கமும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்லவுள்ளனர். மேலும் சிலர் தேசிய மக்கள் சக்தியுடன் இணைவதற்குத் திட்டமிட்டுள்ளனர்.
எனவே, கட்சி தாவல்கள் களைகட்டும் என்றும், சுமார் 40 வரையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது அரசியல் நிலைப்பாட்டை மாற்றத் திட்டமிட்டுள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.